டில்லி

க்களவை தேர்தலை முன்னிட்டு பல வாட்ஸ்அப் எண்கள் முடக்கபடுவதற்கான காரணங்கள் இதோ.

மக்களவை தேர்தலில் கடந்த 11 ஆம் தேதி முதல் மே மாதம் 18 ஆம் தேதி வரை ஏழு கட்டமாக வாக்குப்பதிவுகள் நடக்க உள்ளது.    இதில் முதல் கட்ட வாக்குப்பதிவு மட்டும் முடிவடைந்துள்ளது.   இந்த தேர்தலில் பல சமூக வலை தளங்களில் போலிச் செய்திகள் பகிரப்படுவதால் அனைத்து கணக்குகளும் மிகவும் கண்காணிக்கப் படுகின்றன.

முக்கியமாக முகநூல் கணக்குகளும் வாட்ஸ்அப் எண்களும் பெருமளவில் முடக்கப்பட்டுள்ளன.   இவற்றால் பல முக்கியமான செய்திகளையும் இந்த பயனாளிகளால் அனுப்ப முடியாத நிலை உள்ளது.   இவ்வாறு கணக்கு முடக்கப்பட முக்கியமாக நான்கு காரணங்கள் உள்ளன.

அவை பின் வருமாறு

1.       தேவையற்ற மற்றும் தானியங்கி மூலம் பலருக்கு செய்திகள் அனுப்புதல் :   வாட்ஸ்அப்  தளம் ஒரே நேரத்தில் ஒரே செய்தியை பலருக்கு அனுப்புவதையும் தானியங்கி மூலம் செய்திகள் அனுப்புவதையும் தவிர்க்குமாறு பல முறை எச்சரித்துள்ளது.   அத்துடன் தேவையற்ற செய்திகள் அனுப்புவதும் கூடாது என எச்சரித்துள்ளது.   இவ்வாறு அனுப்புபவர்கள் கணக்கு முடக்கப்பட வாய்ப்பு உள்ளது.

2.       உங்களுடைய தொடர்பு பட்டியலில் இல்லாதோருக்கு தகவல் அனுப்புதல் : வாட்ஸ்அப் அறிமுகம் இல்லாதவர்களுடன் உங்கள் எண்களை பகிர வேண்டாம் என ஏற்கனவே எச்சரித்துள்ளது.   அதனால் அறிமுகம் இல்லாதவர்களுக்கு அதிகமாக தகவல்கள் அனுப்புவோரின் எண்கள் முடக்கப்படலாம்

3.       செய்தி பெறுவோர் பட்டியல் மூலம் அதிகமாக செய்திகள் அனுப்புதல் : பலர் ஒரு பட்டியலை அமைத்து (BROADCASTING LIST) அதில் உள்ளவர்களுக்கு  தொடர்ந்து செய்திகள் அனுப்புவதை வழக்கமாக  கொண்டுள்ளனர்.   அதில் பலருக்கு அனுப்புபவர் யார் என தெரியாததால் செய்தி பெறுபவர்கள் புகார்கள் அளிக்கின்றனர்.  அந்த புகாரின் அடிப்படையில் கணக்குகள் முடக்கப்படக் கூடும்

4.       வாட்ஸ்அப் விதிமுறை மீறல் :  வாட்ஸ்அப் தனது விதி முறையில் போலியான செய்திகள், சட்ட விரோதமான செய்திகள், வெறுப்புட்டும் செய்திகள், மிரட்டும் செய்திகள் உள்ளிட்ட செய்திகள் அனுப்பக் கூடாது என விதிமுறைகள் வகுத்துள்ளன.   அந்த விதிமுறையை மீறுபவர்களின் கணக்குகளும் முடக்கப்படுகின்றது.