திருவனந்தபுரம்:

கேரள மாநிலத்தின் தலைநகர் தொகுதியான திருவனந்தபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் சசிதரூர், கேரள மாநிலத்தின்  வருடப்பிறப்பான  ‘விசு ‘பண்டிகையை  முன்னிட்டு  கோவிலில் எடைக்கு எடை காணிக்கை வழங்கும்போது, துலாபாரம் எனப்படும் தராசு உடைந்து விழுந்து அவரது  தலையில் அடிப்பட்டது.

அதைத்தொடர்ந்து அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதன் காரணமாக அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் சசிதரூர் போட்டியிடு கிறார். தேர்தலுக்காக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் சசிதரூர், இன்று கேரள வருடப்பிறப்பை முன்னிட்டு, திருவனந்தபுரத்தில் உள்ள காந்தாரி அம்மன்  கோவிலில் நடைபெற்ற பூஜையில் கலந்து கொண்டார். அங்கு நேர்த்திக் கடனாக  எடைக்கு எடை காணிக்கை வழங்கும் துலாபாரம் சடங்கில் கலந்து கொண்டார்.

அப்போது எதிர்பாராத விதமாக துலாபாரம் மாட்டப்படிருந்த ஹுக்உடைந்து, துலாபாரம் கீழே விழுந்தது. இதில் சசிதரூர் தலை, கை, கால் உள்பட பல இடங்களில்காயம் ஏற்பட்டதாக தெரிகிறது.  காயம் அடைந்த சசிதரூர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ மனையில் அவரது தலையில் ஆறு தையல்கள் போடப்பட்டிருப்பதாகவும், ஆபத்து எதும் இல்லை என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து உள்ளது. இதன் காரணமாக அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.

திருவனந்தபுரம் மக்களவை தொகுதியில், காங்கிரஸ் கட்சி சார்பில் சசிதரூர் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து, பாரதிய ஜனதா  கட்சி சார்பில்  கும்மனம் ராஜசேகரனும்,  சி.பி.ஐ.(எம்) தலைமையிலான கூட்டணி சார்பில்சி திவாகரனும் போட்டியிடுகின்றனர். அங்கு  வரும் ஏப்ரல்  23 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.