சென்னை: தூத்துக்குடி தொகுதி வேட்பாளராக திமுக சார்பில் களமிறக்கப்பட்டுள்ள எம்.பி. கனிமொழி இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

தமிழகத்தில் ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. தூத்துக்குடி தொகுதியில் மீண்டும் திமுக துணை பொதுச்செய லாளரும், தற்போதைய எம்.பி.யுமான  கனிமொழி மீண்டும்  போட்டியிடுகிறார்.

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளராக  கனிமொழி  இன்று (செவ்வாய்க்கிழமை)  தேர்தல் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் லட்சுமிபதியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.  அப்போது, கனிமொழியுடன் அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன்ஆகியோர் உடனிருந்தனர்.

தூத்துக்குடியில் கனிமொழியை எதிர்த்து அதிமுக சார்பில்  ஆர்.சிவசாமி,  பாஜக கூட்டணியில் தமாகா சார்பில் விஜயசீலன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

முன்னதாக இன்று காலை முதல் முதல்வர் மு.க.ஸ்டாலின் நடைபயணமாக சென்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அதைத்தொடர்ந்து இன்று பிற்பகல் நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்திலும் கலந்துகொண்டு உரையாற்றுகிறார்.