சென்னை:  மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தமிழ்நாட்டில் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், சென்னை உள்பட பல்வேறு இடங்களில் இயந்திர கோளாறு உள்படபல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டுள்ளன. இதனால், பொதுமக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில்  வாக்குப்பதிவு  இயந்திர கோளாறு காரணமாக வாக்குப்பதிவு தாமதமானது. இதனால், பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், பல பகுதிகளில், வாக்குச்சவாடி மையத்தில் உள்ள அரசியல் கட்சிகளின் தேர்தல் ஏஜெண்டுகள் வர தாமதமானால், மாதிரி ஓட்டு நடத்துவதில்  தாமதம் ஏற்பட்டது. இதனால் வாக்குப்பதிவு தொடங்க காலதாமதானது. 

அதுபோல, பல பகுதிகளில் வாக்குச்சாவடிகளில் அமைக்கப்பட்டுள்ள பூத்-கள் மற்றும் எந்தெந்த தெருக்களுக்கு எந்த வாக்குச்சாவடி என்பது குறித்த விவரங்கள்  வைக்கப்படாததால், வாக்காளர்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர். இதனால், வாக்காளர்கள் ஒவ்வொரு வாக்குச்சாவடியாக சென்று, அங்கு தங்களது தெரு பெயர் உள்ளதா என தேடும் அவலம் ஏற்பட்டுள்ளது. 

இதுபோன்ற குளறுபடிகளை தவிர்க்க, ஒவ்வொரு வாக்குச்சாடியின் வெளியிலும், அங்கு  அமைக்கப்பட்டுள்ள பூத் எண்கள், அங்கு  எந்தெந்த பகுதி மக்கள், எந்தெந்த தெருக்கள்  என்பது தொடர்பான போர்டு  வைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியிலுள்ள வாக்குச்சாவடி மையத்தில் இயந்திரத்தில் கோளாறு. நடிகர் ரஜினிகாந்த் வாக்களிக்கவுள்ள மையத்தில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு.

கோவை கணபதி பகுதியில் மாநகராட்சி பள்ளியில் வாக்குச்சாவடியில், வாக்கு சாவடி எண்  285 ல் வாக்குப்பதிவு இயந்திரம் கோளாறு. 45  நிமிடங்கள் தாண்டியும் இன்னும் வாக்குப்பதிவு துவங்கவில்லை.

காஞ்சிபுரம் மாவட்டம்  ஸ்ரீபெரும்புதூர் தொகுதி இருங்காட்டுக்கோட்டையில் உள்ள வாக்குசாவடி எண் 101 ல் இரண்டு மையங்கள் உள்ளன. இதில் ஒரு மையத்தில் 7 மணி முதல் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால் தற்போது வரை வாக்குபதிவு நடைபெறவில்லை.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி உட்பட்ட ஆயக்கொளத்தூர் 82ஆவது வாக்கு சாவடி மையத்தில் வாக்களிக்கும் இயந்திரம் பழுதானதால் தற்காலிகமாக வாக்களிப்பது நிறுத்தும் பழுதான இயந்திரத்தை சரி செய்யும் பணியில் அரசு அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

நெல்லை தச்சநல்லூர் அருகே ஊருடையான் குடியிருப்பு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வாக்குச்சாவடி எண் 285 ல் இரண்டு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுது ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, காலையில் வாக்களிக்க வந்தவர்கள் காத்திருக்கின்றனர்.

மேலும் பல பகுதிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டு, வாக்குப்பதிவு தாமதமாகி உள்ளது.