டெல்லி: இந்திய ஜனநாயகத்தை தீர்மானிக்கும் இந்த தேர்தலில் ஒவ்வொருவரும் வாக்களிக்க வேண்டும் என பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல்காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளனர்,.
முதல்முறை வாக்காளர்கள் மற்றும் இளைஞர்கள் அதிக அளவில் வாக்களிக்க வேண்டும் என நரேந்திர மோடி தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதுபோல, இந்தியாவின் ஜனநாயகத்தை வலுப்படுத்த ஒவ்வொருவரும் வாக்களிக்க வேண்டும் என காங்கிரஸ் இளந்தலைவர் ராகுல் காந்தி தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பிரதமர் மோடி தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் தமிழில் வெளியிட்டுள்ள , “ 2024 மக்களவைத் தேர்தல் இன்று தொடங்குகிறது! 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், இந்தத் தொகுதிகளில் வாக்களிக்கும் அனைவரும் சாதனை அளவை எட்டும் வகையில் தங்களது வாக்குரிமையை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். குறிப்பாக இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். ஏனென்றால், ஒவ்வொரு வாக்கும் ஒவ்வொரு குரலும் முக்கியமானது!” என குறிப்பிட்டுள்ளார்.
அதுபோல, இந்தியாவில் இருக்கும் வெறுப்புவாதத்தை வீழ்த்தி, ஜனநாயகத்தை நிலைநாட்ட ஒவ்வொரு குடிமக்களும் வாக்களிக்க வேண்டும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பபாக காந்தி தனது எக்ஸ் தளத்தில், இந்தியில் வெளியிட்டுள்ள பதிவில், “ இன்று முதல் கட்ட வாக்குப்பதிவு! உங்கள் வாக்குகள் ஒவ்வொன்றும் இந்திய ஜனநாயகத்தின் எதிர்காலத்தையும், வரும் தலைமுறையையும் தீர்மானிக்கப் போகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஒவ்வொருவரும் வெளியே வந்து உங்கள் வாக்கினை பதிவு செய்து, ஜனநாயகத்தை வலுப்படுத்த வேண்டும். வெறுப்பு வாதத்தை தோற்கடித்து, ஒவ்வொரு மூலையிலும் அன்பை செலுத்த உதவ வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.