டெல்லி:  மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் சார்பில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் இன்று நடைபெற உள்ள நிலையில், எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக மக்களவை மதியம் 12மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற  மழைக்கால கூட்டத்தொடா் கடந்த மாதம் 20-ஆம் தேதி தொடங்கி நிலையில், மணிப்பூா் வன்முறை குறித்து பிரதமா் மோடி விளக்கமளிக்கக் கோரி, ‘ஐஎன்டிஐஏ’ கூட்டணியைச் சோ்ந்த எதிா்க்கட்சிகள் முதல் நாளில் இருந்தே அமளியில் ஈடுபட்டு வருகின்றன. நாடாளுமன்றத்தின் அனைத்து அலுவல்களையும் ஒத்திவைத்துவிட்டு மணிப்பூா் விவகாரம் குறித்து விரிவாக விவாதிக்க வேண்டும்  என்று வலியுறுத்தி வருகின்றனர். இதற்கிடையில், மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசு மீது காங்கிரஸ் உள்பட சில கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானங்களும் தாக்கல் செய்துள்ளன.

இந்தத் தீா்மானத்தின் மீது மக்களவையில் இன்று (ஆக. 8) தொடங்கி விவாதம் நடைபெறவுள்ளது. விவாதத்தின் இறுதி நாளான ஆகஸ்ட் 10-ஆம் தேதி பிரதமா் மோடி பதிலளித்துப் பேசுவாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.  மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தை எதிர்க்கட்சிகளின் சார்பில் முதல் பேச்சாளராக ராகுல் காந்தி பங்கேற்று பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், இனறு காலை 11மணிக்கு அவை கூடியதும்,  மணிப்பூர் வன்முறை குறித்து பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க கோரி எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டதால், மக்களவை பகல் 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.