பெங்களூரு: கர்நாடக மாநில அமைச்சர்மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் குடும்பத்தோடு விஷம் குடிப்போம் என ஆளுநர் மாளிகையில் அதிகாரிகள் புகார் மனு கொடுத்துள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிகாரிகள் இடமாற்றம் தொடர்பாக லஞ்சம் கேட்பதாக அமைச்சர் சாலுவராயசாமிக்கு எதிராக 7 உதவி இயக்குநர்கள் ஆளுநருக்கு  கடிதம் எழுதி உள்ளனர். இது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநில முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே.சிவகுமாரும் இருந்த வருகின்றனர். காங்கிரஸ் அமைச்சரவை பதவி ஏற்று 3 மாதங்களே முடிந்துள்ள நிலையில்,அங்குள்ள அமைச்சர்கள் மீது பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன.

இந்த நிலையில், மாண்டியா மாவட்டத்தில் உள்ள வேளாண்மைத் துறையின் 7 உதவி இயக்குநர்கள், அமைச்சர் ஒருவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டுக்கு புகார் கடிதம் எழுதி உள்ளனர்.

அதிகாரிகள் பணியிட மாறுதல்களுக்கு ரூ.  6-8 லட்சம் லஞ்சம் தருமாறு வேளாண் துறை அமைச்சர் என்.சலுவராயசாமி, இணை இயக்குநர் மூலம் அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுப்பதாக அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், குடும்பத்தினருடன் சேர்ந்து விஷம் அருந்துவதாக அதிகாரிகள் மிரட்டியுள்ளனர். அந்த கடிதத்தின் அடிப்படையில், கவர்னர் அலுவலகம், உரிய நடவடிக்கைக்காக, தலைமை செயலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு, ஆளுநர் மாளிகை தலைமைச்செயலாளருக்கு அறிவுறுத்தி உள்ளத.  அந்த கடிதத்தில், மாண்டியா, மளவள்ளி, கிருஷ்ணராஜ பேட்டை, பாண்டவபுரா, ஸ்ரீரங்கப்பட்டணா, மத்தூர் ஆகிய உதவி இயக்குநர்கள் அமைச்சர் மற்றும் வேளாண் துறை இணை இயக்குநர் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளதாக தலைமைச் செயலர் வந்திதா சர்மாவுக்கு ஆளுநர் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து விளக்கம் அளித்த வேளாண்துறை அமைச்சர் செல்வராய சுவாமி,இந்த கடிதத்தின் நம்பகத்தன்மையில் சந்தேகம் உள்ளதாக கூறியுள்ளார். தனது துறையில் பணிபுரியும் எந்த அதிகாரிகளும் கடிதம் எழுதவில்லை என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும், உண்மை என்ன என்பது விசாரணையின் முடிவில் தெரியவரும் என கூறியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடுமாறு முதல்வர் சித்தராமையாவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக வேளாண்துறை அமைச்சர் என்.சலுவராயசாமி தெரிவித்தார்.

இதுகுறித்து விமர்சனம் செய்த, பாஜக தலைவர் பசனகவுடா பாட்டீல் யத்னால், சித்தராமையா அரசை கேலி செய்து, ‘அதிக ஏலம், அதிக பதவி’ என்று கூறினார்.

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் அரசு பதவி ஏற்று 3 மாதங்கள் மட்டுமே முடிவடைந்துள்ள நிலையில், அமைச்சர் மீது, அதிகாரிகள் குற்றம் சாட்டி எழுதியுள்ள இந்த  கடிதத்தால் கர்நாடகா காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.