சென்னை:

லோக்பால் சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்ததும், தமிழகத்தில் நிறைவேற்றப்படும் என்று எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின்  கேள்விக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதில் அளித்தார்.

தமிழக சட்டசபையின் இன்றைய கூட்டத்தில், கேள்வி நேரத்தின்போது தமிழக எதிர்க்கட்சி தலைவரும், திமுக செயல்தலைவருமான மு.க.ஸ்டாலின் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.

அப்போது, 2015 மழை வெள்ளம், வர்தா புயல் என்று நீங்கள் கேட்ட நிதியை, மத்திய அரசிடம் இருந்து பெற்றுள்ளீர்களா? என்றும்,  தமிழக அரசு மத்திய அரசிற்கு நன்றி கடன் பட்டிருக்கிறதா? என்று நினைக்க தோன்றுகிறது; ஆளுநர் உரையில் மத்திய அரசிற்கு அத்தனை நன்றிகள் என்று வினா எழுப்பிய ஸ்டாலின்,  ஆளுநரின் உரையில் மத்திய அரசிடம் பெற்ற நிதியை ஏன் குறிப்பிடவில்லை என்றார்.

மேலும், மாநில அரசு கேட்டதை மத்திய அரசு கொடுக்கவில்லை என்பதையே ஆளுநரின் உரை காட்டுகிறது என்றும்,   ஆளுநரின் உரை ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது என்றார்.

தொடர்ந்து லோக்பால்சட்டம் குறித்து கேள்வி எழுப்பினார். மேலும், தமிழக்ததில் லோக்ஆயுக்தா எப்போது கொண்டு வரப்படும் என்றும் கேட்டார்.

இதற்கு பதில் அளித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,  லோக்பால் சட்டத்தில் சில திருத்தங்கள் செய்யப்பட உள்ளன. மத்திய அரசு அந்த திருத்தங்களை  மேற்கொண்ட பின், லோக் ஆயுக்தா தமிழகத்தில் நிறைவேற்றப்படும் என கூறினார்.

காங்கிரஸ் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெற்றபோது கடந்த 2013ம் ஆண்டு  லோக்பால் மற்றும் லோக்ஆயுக்தா சட்டம் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இதன்படி  மத்திய அளவில் லோக்பால், மாநிலங்களில் லோக் ஆயுக்தா அமைப்புகளை ஏற்படுத்துவதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த அமைப்பு மூலம் அதிகாரிகள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க முடியும்.

தற்போது,  நாடு முழுவதும் 20 மாநிலங்களில், லோக் ஆயுக்தா அமைப்பு ஏற்படுத்தப்பட்டு விட்டது. ஆனால், தமிழகத்தில் இன்னும் அதற்கான பணிகள் எதுவும் தொடங்கப்படவில்லை. இதுகுறித்த வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், கடந்த  2014ம் ஆண்டு  நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அதன் காரணமாக  பாஜக அரசு, காங்கிரஸ் ஆட்சியின்போது கொண்டு வரப்பட்ட லோக்பால் மசோதாவை நிறைவேற்றாமல் காலம் தாழ்த்தி வருகிறது.

சமீபத்தில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திகூட, லோக்பால் சட்டம் நிறைவேற்றப்பட்டு 4 ஆண்டுகள்  ஆகிவிட்டது, ஆனால், இன்னும் லோக்பால் அமைக்கப்பட வில்லை. எப்போது வரை இந்த தவறை தொடர்ந்து செய்வீர்கள் என்பதை மக்கள் தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள் என்று டுவிட் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.