சென்னை
இந்த ஆண்டு நவம்பர் 28 முதல் தமிழகத்தில் நடைபெற உள்ள ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி தொடருக்க்கான லோகோ வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் மதுரையில் ஆடவர் ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி தொடர் இந்த ஆண்டு நவம்பர் 28-ம் தேதி முதல் டிசம்பர் 10-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஹாக்கி இந்தியா கூட்டமைப்பு நேற்று தமிழக அரசுடன் கையெழுத்திட்டபோது தொடருக்கான அதிகாரபூர்வ லோகோவும் வெளியிடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் ஹாக்கி இந்தியா கூட்டமைப்பின் நிர்வாகிகளும் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு உதயநிதி ஸ்டாலின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டார்.
உதயநிதி ஸ்டாலின் அப்போது செய்தியாளர்களிடம்,
“கோயம்புத்தூரில் இருக்கின்ற ஹாக்கி ஸ்டேடியம் சர்வதேச தரத்தில் தான் இருக்கிறது. சென்னையில் எல்லா வசதிகளுடன் கூடிய ஒரு ஸ்டேடியம் இருப்பதினால் சென்னையில் நடத்த முடிவு செய்தோம். சென்னையில் மட்டும் இருக்கக்கூடாது தென் தமிழகத்திலும் இதை நடத்த வேண்டும் என்பதற்காக, இதை நடத்தும் போது உள்கட்டமைப்பு மேம்பாடு பண்ண வேண்டும் என்பதற்காக மதுரையிலும் நடத்துவதற்கு முடிவெடுத்துள்ளோம். தென் தமிழகத்திலிருந்து நிறைய ஹாக்கி வீரர்கள் வருகிறார்கள். அவர்களையும் ஊக்கப்படுத்த வேண்டும், உற்சாகப் படுத்தவேண்டும் என்பதற்காக தென்னகத்தில் நடத்துகின்றோம்’
என்று தெரிவித்துள்ளார்.