கொரோனா வைரஸ் முதல் அலை கடந்த ஆண்டு தொடங்கியபோது முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில், தொற்று நோய் பாதிப்பு ஆஸ்திரேலியா-வில் படிப்படியாக குறைந்தது.
பின்னர் இரண்டாவது அலையில் டெல்டா வகை கொரோனா வைரஸால் மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டதும், நிலைமைக்கு ஏற்ப இந்தாண்டு ஜூன் மாதம் முதல் அந்தந்த மாகாணங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.
ஆஸ்திரேலியாவின் மிகப்பெரும் நகரமான சிட்னியில் சுமார் 70 சதவீதத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு முழுவதுமாக தடுப்பூசி போடப்பட்டு உள்ளது அதனால் இன்று முதல் ஊரடங்கு உத்தரவு விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து சிட்னி நகரில் உள்ள, உணவகம், பார், மற்றும் அனைத்துப் பொது இடங்களிலும் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்ட மக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சிட்னி போன்ற பெருநகரங்களில் மட்டுமே தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் விழுக்காடு அதிகளவு உள்ளது நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தின் பிற பகுதிகள் மற்றும் சிட்னி நகரின் புறநகர் பகுதிகளில் கூட 30 விழுக்காடு மக்களுக்கு மட்டுமே இதுவரை முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் முற்றிலும் நீங்கவில்லை என்ற போதும் 18 மாத ஊரடங்கை மேலும் நீட்டிக்க விரும்பாதா மாகாண நிர்வாகம் ஊரடங்கு கட்டுப்பாட்டை நீக்கியுள்ளது. மக்கள் ஒருவருடன் ஒருவர் சந்திக்கும் போது கொரோனா பரவல் மேலும் அதிகரிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், மக்கள் கொரோனாவுடன் வாழ பழகிக்கொள்ள வேண்டிய நிலைக்கு வந்துவிட்டதாகவே தோன்றுகிறது.