பெங்களுரூ:
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அமலில் உள்ள ஊரடங்கு வரும் 14-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில், கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை கடும் பாதிப்பை ஏற்படுத்தி, தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. நோய் பரவலைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கு போன்ற கடும் நடவடிக்கைகளை தமிழகம், கேரளா, கர்நாடகா, டெல்லி போன்ற மாநில அரசுகள் எடுத்துள்ளன.

இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் அமலில் உள்ள ஊரடங்கை, வரும் 14-ம் தேதி வரை நீட்டித்து, அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார். இந்த கட்டுப்பாடுகளிலிருந்து அத்தியாவசிய சேவைகளுக்கு விலக்களிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, சமூக வலைதளமான டுவிட்டரில், கர்நாடக மாநில முதலமைச்சர் எடியூரப்பா வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது:

இம்மாத இறுதிக்குள் 60 லட்சம் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வரும் 30-ம் தேதிக்குள் 2 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு விடும். கர்நாடக மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தங்கு தடையின்றி நடைபெற நடவடிக்கை எடுத்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி.
இவ்வாறு அவர் தெரிவித்துளள்ளார்.