திருபுவனம்

கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து கீழடியில் மீண்டும் அகழாய்வு பணிகள் தொடங்கி உள்ளன.

கோப்பு படம்

தமிழர்களின் தொன்மை வரலாற்றைக் கண்டறியச் சிவகங்கை மாவட்டம் திருபுவனம் அருகில் உள்ள கீழடியில் அகழாய்வுப் பணிகள் நடந்து வருகின்றன.  ஏற்கனவே இந்த பகுதியில் 6 கட்ட ஆய்வுகள் முடிவடைந்துள்ள நிலையில் தற்போது 7ஆம் கட்ட அகழாய்வு பணிகள் கடந்த பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதி தொடங்கியது.

கீழடி மற்றும் அகரம், கொந்தகை, மணலூர் பகுதிகளில் நடந்து வரும் அகழாய்வில் கீழடியில் 5 குழிகளும், கொந்தகை மற்றும் அகரத்தில் தலா 3 குழிகளும் மணலூரில் 2 குழிகளும் தோண்டப்பட்டன.   இதில் சுடுமண் பகடை, கல் உழவுக் கருவி, பாசிகள், மணிகள், மூடியுடன் கூடிய பானை போன்றவை கிடைத்தன.

கடந்த மே மாதம் 10 ஆம் தேதி முதல் தமிழகத்தில் கொரோனா காரணமாக முழு ஊரடங்கு விதிக்கப்பட்டது.   அதையொட்டி அகழாய்வுப் பணிகளும் நிறுத்தப்பட்டன.  நேற்று ஊரடங்கு தளர்வுகளின் அடிப்படையில் மீண்டும் பணிகள் தொடங்கி உள்ளன.   நேற்று அகழாய்வு குழிகள் மீது மூடியிருந்த தார்ப்பாய்களை அகற்றி சுத்தம் செய்யும் பணி  ஆரம்பிக்கப்பட்டுள்ளது.