சென்னை:

கிரேட்டர் சென்னை கார்ப்பரேஷன் கடந்த 8 மாதங்களில் சுமார் 84 லட்சம் ரூபாயை மிச்சப்படுத்தி உள்ளது. வாகனங்களின் மூலம் கழிவுகள் எடுத்துச் செல்வது குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த சேமிப்பு கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

கடந்த 2018-ஆம் ஆண்டு தூய்மை பாரத திட்டத்தின்கீழ், நகராட்சி திடக்கழிவு மேலாண்மை பணிக்காக குப்பை சேரும் இடத்திலேயே குப்பைகளைப் பிரித்து நுண்ணிய உரமாக்கும் திட்டம் தமிழகத்தில் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி என அனைத்து பகுதிகளிலும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி குப்பைகளை வாங்கும் இடத்தின் அருகிலேயே மக்கும் குப்பை, மக்கா குப்பை என தரம் பிரிக்கப்பட்டு, மக்கும் குப்பை உரமாகவும், மக்கா குப்பையின் ஒரு பகுதி சிமென்ட் நிறுவனத் துக்கும், வேறு சில பயன்பாட்டுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக சென்னையில் உள்ள பெருங்குடி மற்றும் கொடுங்கையூர் குப்பை கிடங்களுக்கு கொண்டு செல்லப்படும் குப்பைகளின் அளவு பாதியாக குறைந்துள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்து உள்ளது.   15 அடி உயரத்துக்கு கொட்டப்பட்டிருந்த குப்பை அளவு இந்த திட்டத்தின் மூலம் மேலும் உயராமல் தடுக்கப்பட்டுள்ளது. துப்புரவுப் பணிகளும் எந்தவிதமான சுணக்கமு மின்றி விரைவாக நடைபெறு அதிகாரிகள் கூறி உள்ளனர்.

இதற்காக சென்னையில் பல இடங்களில் மாநகராட்சி சார்பில் பல இடங்களில் அதற்கான மையம் அமைக்கப்பட்டு கழிவுகள் பிரிக்கப்பட்டு வருகின்றன. இதன காரணமாக பல இடங்களில் குப்பைகளைக் கொட்ட வைக்கப்படும் சாலையோர குப்பைத் தொட்டி தேவைப்படாத சூழல் ஏற்பட்டு உள்ளதாகவும், இதன் காரணமாக குப்பைக்கூளங்களை ஏற்றிச் செல்லும் லாரிகளின் இயக்கம் குறைந்து உள்ளது என்றும் தெரிவித்து உள்ளனர்.

இதன் காரணமாக   400 டன்களில் ஈரமான கழிவுகள் மற்றும் 200 டன் உலர்ந்த கழிவுகள் உள்பட சுமார் 600 டன் எடையுள்ள குப்பைகள் கொட்டப்படுவது  குறைந்துள்ளதாக கூறிய அதிகாரிகள்,   கடந்த மே மாதம் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு பூஜ்ஜிய கழிவுக் கொள்கையை அறிமுகப்படுத்திய பின்னர் இந்த அளவுக்கு சேமிப்பு ஏற்பட்டு உள்ளதாகவும்,  தற்போது சென்னையில் இதற்கான  66 வள மீட்பு மையங்கள் செயல்பட்டு வருவதாகவும், மேலும் 167 மைக்ரோ உரம் மையங்களையும் ஏற்படுத்த முடிவு செய்து உள்ளதாகவும் தெரிவித்து உள்ளனர்.

குப்பை லாரிகள் இயக்கம் மற்றும் அதற்கான செலவு போன்றவற்றால் சென்னை மாநகராட்சிக்கு கடந்த 4 மாதங்களில் மட்டும் சுமார் 84 லட்சம் சேமிக்கப்பட்டு உள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.