சென்னை:
மிழகத்தில் 11 இடங்களில் அம்மா திருமண மண்டபங்கள் கட்டப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்து உள்ளார்.

(அம்மா திருமண மண்டபம் - மாதிரி படம்)
(அம்மா திருமண மண்டபம் – மாதிரி படம்)

ஏழைகள் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்த அம்மா திருமண மண்டபம் கட்டப்படும் என்று முதலமைச்சர் ஜெயலிலதா அறிவித்துள்ளார். 11 இடங்களில் ரூ.83 கோடியில் அம்மா மண்டபம் கட்டப்படும் என அறிவித்துள்ளார்.
ரூ. 1800 கோடி மதிப்பீட்டில் நடப்பாண்டில் 50000 குடியிருப்புகள் கட்டப்படும் என்றும் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு, குறைந்த வட்டியில் வீட்டுக் கடன், வீட்டு மனைகள் கிடைக்க, கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்கள் ஏற்படுத்தப்பட்டன.
நிர்வாக குளறுபடி, நிலுவை அதிகரிப்பு காரணமாக, ஏராளமான சங்கங்கள் முடங்கி விட்டன. தற்போதைய நிலவரப்படி, 650 வீட்டு வசதி சங்கங்களே செயல்பாட்டில் உள்ளன.
இந்த சங்கங்களிடம் உள்ள காலி நிலங்களை வணிக ரீதியாக பயன்படுத்தி, வருவாய் ஈட்ட, அரசு அறிவுறுத்தி உள்ளது.
இதையடுத்து, எந்தெந்த சங்கங்கள் வசம் காலி நிலங்கள் உள்ளன என்பது குறித்த விபரம் சேகரிக்கப்பட்டு, வருவாய் ஈட்டும் திட்டங்கள் தயாரிக்கப்பட்டு உள்ளன. செங்கல்பட்டு மண்டலத்தில், யூனியன் கார்பைடு பணியாளர் கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்துக்கு சொந்தமாக, சென்னை, கொடுங்கையூரில், 6,332 சதுர அடி காலி நிலம் உள்ளது; இதில், 1.5 கோடி ரூபாய் செலவில், அம்மா திருமண மண்டபம் கட்டப்பட உள்ளது.
சேலம் மண்டலத்தில், ஸ்வர்ணபுரி கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்துக்கு சொந்தமாக, 7,980 சதுர அடி காலி நிலம் உள்ளது; இதில், 2.87 கோடி ரூபாய் செலவில், அம்மா திருமண மண்டபம் கட்டப்பட உள்ளது.
திருப்பூர் மாவட்டம், உடுமலை வட்டத்தில் உள்ள, பழனி ஆண்டவர் ஆலை தொழிலாளர் வீட்டு வசதி சங்கத்துக்கு சொந்தமான, காலி நிலத்தில், 40 லட்ச ரூபாய் செலவில், அம்மா திருமண மண்டபம் கட்டப்பட உள்ளது
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் பகுதியில், மதுரா கோட்ஸ் வீட்டு வசதி சங்கத்துக்கு சொந்தமாக உள்ள, 11,223 சதுர அடி நிலத்தில், 1.31 கோடி ரூபாய் செலவில், குளுகுளு ஏசி வசதியுடன் அம்மா இலவச திருமண மண்டபங்கள் கட்டப்படும்/
இதேபோல ரூ. 1800 கோடி செலவீட்டில் 50000 குடியிருப்புகள் கட்டப்படும் என்றும் இன்று அறிவித்துள்ளார் ஜெயலலிதா.
உள்ளாட்சித் தேர்தல் வருவதை கருத்தில் கொண்டு  இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்  முதல்வர் என அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.
அம்மா உணவகம், அம்மா உப்பு, அம்மா குடிநீர், அம்மா சிமெண்ட், அம்மா வாரச்சந்தை, அம்மா மருந்தகம் வரிசையில்  அம்மா தியேட்டரை அடுத்து அம்மா கல்யாண மண்டபமும்  இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.