சென்னை,
ள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவி காலம் நேற்றோடு முடிவடைந்துள்ளதால், இன்று முதல் உள்ளாட்சிகளின் நிர்வாகம் தனி அதிகாரிகளின் கையில் வந்துள்ளது. இதற்கான அரசாணை நேற்று பிறப்பிக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் நடைபெற வேண்டிய உள்ளாட்சி தேர்தலை, திமுக தொடர்ந்த வழக்கின் காரணமாக சென்னை உயர்நீதி மன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.
இதனால் உள்ளாட்சி பிரதிநிதிகளின்  பதவி முடியும்முன் உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக உள்ளாட்சிகளின் நிர்வாகத்தை கவனிக்க தனி அதிகாரிகளை நியமிக்கும் அரசாணை நேற்று வெளியிடப்பட்டது.
தமிழ்நாட்டில்  உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 2011ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளின் 5 ஆண்டுகால பதவி காலம் நேற்றுடன் முடிவடைந்தது.
எனவே புதிய பிரதிநிதிகளை தேர்ந்து எடுப்பதற்காக கடந்த 17 மற்றும் 19ம் தேதிகளில் இரு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.
ஆனால் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்ததுடன், மாநில தேர்தல் ஆணையம் புதிய அறிவிப்பாணை வெளியிட்டு டிசம்பர் 31ம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று கடந்த 4ம் தேதி உத்தரவிட்டது.
உயர்நீதிமன்ற உத்தரவுப்படி உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனி அதிகாரிகளை நியமிப்பதற்கான அவசர சட்டத்தை தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ் கடந்த 17-ந் தேதி பிறப்பித்தார்.
உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவி காலம் முடிவடைந்ததை தொடர்ந்து, உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனி அதிகாரிகளை நியமனம் செய்வதற்கான அரசாணைகள் நேற்று பிறப்பிக்கப்பட்டன.
govt-corp
அரசாணையின் விவரம்:
தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் முதன்மைச் செயலாளர் கே.பணீந்தர ரெட்டி பிறப்பித்துள்ள அரசாணை:
•சென்னை உள்பட 12 மாநகராட்சிகளுக்கு அந்தந்த மாநகராட்சிகளின் ஆணையர்களே தனி அதிகாரியாக செயல்படுவார்கள்.
•பேரூராட்சிகளின் நிலைக்கு ஏற்றவகையில், அந்த பேரூராட்சிகளின் உதவி இயக்குனர்கள் அல்லது செயல் அதிகாரிகள் அதன் தனி அதிகாரியாக செயல்படுவார்கள். அதுபோல் அந்தந்த நகராட்சிகளின் ஆணையர்கள், அந்தந்த நகராட்சிகளின் தனி அதிகாரிகளாக செயல்படுவார்கள்.
•ஊரக மேம்பாடு மற்றும் ஊராட்சிகள் துறையின் முதன்மைச் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா வெளியிட்டுள்ள அரசாணை:
•அந்தந்த ஊராட்சி ஒன்றியங் களில் உள்ள கிராம ஊராட்சிகளுக்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் (பி.டி.ஓ.) தனி அதிகாரிகளாக செயல்படுவார்கள்.
•சென்னை தவிர மற்ற 31 மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட ஊராட்சிகளுக்கு, அந்தந்த மாவட்டத்தைச் சேர்ந்த கூடுதல் இயக்குனர் அல்லது கூடுதல் கலெக்டர் அல்லது இணை இயக்குனர் ஆகிய நிலைகளில் உள்ள அதிகாரிகள் அல்லது மாவட்ட ஊரக மேம்பாட்டு முகமைகளின் திட்ட இயக்குனர் தனி அதிகாரியாக செயல்படுவார்கள்.
•ஊராட்சி ஒன்றியங்களுக்கு, ஊரக மேம்பாடு மற்றும் ஊராட்சி துறையின் அந்தந்த மாவட்ட உதவி இயக்குனர் (ஊராட்சி), உதவி இயக்குனர் (தணிக்கை) ஆகியோர் தனி அதிகாரியாக செயல்படுவார்கள்.
•காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள காஞ்சீபுரம், வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதூர், காட்டாங்குளத்தூர், செயிண்ட் தாமஸ் மவுண்ட், திருப்போரூர், குன்றத்தூர், லத்தூர், திருக்கழுக்குன்றம், சித்தாமூர், மதுராந்தகம், அச்சரப்பாக்கம், உத்திரமேரூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு சம்பந்தப்பட்ட உதவி இயக்குனர்கள் (ஊராட்சிகள்) தனி அதிகாரிகளாக இருப்பார்கள்.
•திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவள்ளூர், பூண்டி, கடம்பத்தூர், திருத்தணி, திருவாலங்காடு, பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு சம்பந்தப்பட்ட உதவி இயக்குனர்கள் (ஊராட்சிகள்) தனி அதிகாரிகளாக இருப்பார்கள்.
•வில்லிவாக்கம், பூந்தமல்லி, புழல், சோழவரம், மீஞ்சூர், கும்மிடிப்பூண்டி, எல்லாபுரம் ஊராட்சி ஒன்றியங்களுக்கு சம்பந்தப்பட்ட உதவி இயக்குனர்கள் (தணிக்கை) தனி அதிகாரிகளாக செயல்படுவார்கள்.
•உள்ளாட்சி தேர்தல் முடிந்து முதல் கவுன்சில் கூட்டம் கூடும் வரையிலோ அல்லது டிசம்பர் மாதம் 31ம் தேதி வரையிலோ தனி அதிகாரிகள் அந்த பொறுப்பில் இருப்பார்கள்.
உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகம் தனி அதிகாரிகள் வசம் வந்ததை அடுத்து மக்கள் பிரதிநிதிகள் உபயோகித்து வந்த கார், போன், அலுவலக அறைகள் திரும்ப பெறப்பட்டுள்ளன.