சென்னை:
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும் மத்திய பாஜக அரசைக் கண்டித்து தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தேர்தல்கள் புறக்கணிப்பபதாக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
vel-murugan
“தமிழகத்தின் காவிரி ஆற்று நீர் உரிமையை கர்நாடகாவுக்கு காவு கொடுக்கும் வகையில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவே முடியாது என பச்சைத்துரோகம் செய்து வரும் இந்திய மத்திய பாரதிய ஜனதா அரசைக் கண்டித்து,
தஞ்சாவூர், அரவக்குறிச்சி மற்றும் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை தமிழக வாழ்வுரிமைக் கட்சி புறக்கணிக்கிறது.
காவிரி ஆற்று நீர் உரிமை கோரியதற்காக கர்நாடகாவில் தமிழர்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டது. தமிழர்களின் உடைமைகள் சூறையாடப்பட்டன.  ஆனாலும் இந்திய மத்திய அரசு அதைக் கண்டிக்கவும் இல்லை…  தமிழகத்துக்கு திறந்துவிடப்பட வேண்டிய காவிரி நீரையும் திறந்துவிட எந்த ஒரு முயற்சியையும் மேற்கொள்ளவில்லை.
இதனால் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் பொதுக்குழு, செயற்குழு முடிவுகளின்படி உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தோம்.
இதன் பின்னரும் தொடர்ந்தும் தமிழகத்தின் காவிரி ஆற்று நீர் உரிமையை கர்நாடகா மறுத்து வருகிறது.
இந்திய மத்திய பாஜக அரசோ உச்சகட்டமாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் மறுத்து வருகிறது.
தமிழகத்தை வஞ்சிப்பது ஒன்றையே கொள்கையாக வைத்திருக்கிறது இந்திய மத்திய பாஜக அரசு.
இந்திய மத்திய பாஜக அரசின் இந்த துரோகத்தைக் கண்டிக்கும் வகையில் நவம்பர் 19-ந் தேதியன்று நடைபெற உள்ள தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கான தேர்தலை தமிழக வாழ்வுரிமைக் கட்சி புறக்கணிக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்”
இவ்வாறு தனது அறிக்கையில் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.