சென்னை: கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள சாலையோர வியாபாரிகளுக்கு கடன் கொடுத்து உதவுங்கள் என வங்கிகளுக்கு சென்னை மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்றினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட சாலையோர வியாபாரிகளுக்கு வங்கிகள் மூலம் திருப்பி செலுத்தக்கூடிய வகையில் பணி மூலதன கடனாக ரூ.10.000 வரை வழங்கும் திட்டம் மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகத்தால் பாரதப் பிரதமரின் ஆத்ம நிர்பார் நிதி (சுயசார்பு) திட்டத்தின்கீழ் தொடங்கப்பட்டது.

இதுதொடர்பாக சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கிகள் கடன் வழங்குவது குறித்து தமிழ்நாட்டு மேம்பாட்டு நிறுவனம், வங்கி அலுவலகர்களுடன் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தலைமையிலான குழுவினர் ஆலோசனை நடத்தினர்.

இதில் பேசிய சென்னை மாநகராட்சி ஆணையர்,  வங்கி கடன் உதவி பெற விண்ணப்பித்த சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.10,000 கடன் தொகையை விரைவாக வழங்கிட வங்கி அலுவலர்கள் மற்றும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுக் நிறுவன அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு  அறிவுறுத்தினார்.

தற்போதுவரை 94,430 விண்ணப்பங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு 35,398 விண்ணப்பங்களுக்கு வங்கிகள் மூலம் கடன் தொகை வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு அனுமதிக்கப்பட்ட விண்ணப்பங்களில் 29,706 சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.10,000 வீதம் கடன் வழங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.