புதுச்சேரி

புதுச்சேரியில் ஒரு திருமண வரவேற்பு நிகழ்வில் தாம்பூலப்பையுடன் மது பாட்டில் அளித்தது சர்ச்சையை உண்டாக்கி உள்ளது.

அண்மையில் சென்னையைச் சேர்ந்த மணமகனுக்கும், புதுச்சேரி வாணரப்பேட்டையை சேர்ந்த மணமகளுக்கும் திருமணம் நடைபெற்றது.  நேற்று முன் தினம் இரவு மணப்பெண்ணின் சொந்த ஊரான புதுச்சேரியில் திருமண வரவேற்பு நிகழ்வு நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.  அப்போது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு மணமகள் வீட்டார் வழங்கிய தாம்பூல பையில் தேங்காய்,பழம், வெற்றிலை பாக்குடன் குவாட்டர் அளவு மது பாட்டிலையும் சேர்த்துக் கொடுத்தனர்.

பெண்ணின் தாய்மாமா இது குறித்து,” சில உறவினர்களும், சென்னையில் இருந்து வந்தோரும் விளையாட்டாகக் கேட்டதால், வித்தியாசமாக மதுபாட்டில் தர முடிவு எடுத்தேன். எனவே ஆண்களுக்குத் தாம்பூல பை தரும்போது அதில் மதுபாட்டிலையும் சேர்த்து தந்தோம்.  மேலும் பெண்களுக்கு வழக்கமான தாம்பூல பை தந்தோம். நான் தாய்மாமனாக உறவினர்களுக்காக தான் மதுபாட்டில் தந்தேன்” என்றார்.

இந்த நிகழ்வு பல்வேறு தரப்பிலும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. பாஜக மாநிலத் துணைத் தலைவர் திருப்பதி நாராயணன் தனது டிவிட்டர் பதிவில்

“இது அநாகரீகத்தின் உச்சக் கட்டம், கலாச்சார சீர்கேடு, பண்பாட்டு சீரழிவு. உடனடியாக தொடர்பு உடையவர்கள் மீது புதுச்சேரி அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்”

எனக் குறிப்பிட்டுள்ளார்.