சென்னை: நான் பேசிய 11 நிமிட முழு உரையையும் கேட்டபின் பேசுங்கள்  என மூத்த காங்கிரஸ் தலைவரும், எம்எல்ஏவுமான  இவிகேஎஸ் இளங்கோவனுக்கு , காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் பதில் தெரிவித்து உள்ளனர்.

சமீபத்தில் புதுக்கோட்டையில் நடந்த கூட்டம் ஒன்றில் காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் பேசியபோது கூட்டணி என்பது தேர்தலுக்கு மட்டும் தான் என்றும், கூட்டணி தர்மத்திற்காக ஆளுங்கட்சி தவறு செய்யும் போதெல்லாம் அதை கண்டுகொள்ளாமல் இருக்க கூடாது என்றும் மக்களுக்காக குரல் எழுப்ப வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதற்கு பதில் அளித்த மூத்த தலைவர்  ஈவிகேஎஸ் இளங்கோவன், திமுக இல்லை என்றால் கார்த்தி சிதம்பரம் டெபாசிட் கூட வாங்கி இருக்க முடியாது என்றும் திமுக தான் அவருடைய வெற்றிக்காக வேலை பார்த்தது என்றும் தெரிவித்தார்.

இதற்கு பதிலடி கொடுத்துள்ள கார்த்திக் சிதம்பரம் தனது சமூக வலைதளத்தில், புதுக்கோட்டையில் நடைபெற்ற தமிழக காங்கிரஸ் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் நான் பேசிய 11 நிமிட முழு உரையையும் கேட்டபின் தங்களது கருத்துக்களை பதிவிடுங்கள்’ என்று பதிவு செய்து அந்த 11 நிமிட உரையின் வீடியோவையும் பதிவு செய்துள்ளார். இதற்கு ஈவிகேஎஸ் இளங்கோவன் என்ன பதில் அளிக்க போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

கார்த்தி சிதம்பரம் பேசியது என்ன?

புதுக்கோட்டையில் காங்கிரஸ் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் தனியார் திருமண மஹாலில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதில், பேசிய சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், ”நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணியால் தான் ஜெயிச்சோம். அதில் யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம். ஆனால் கூட்டணியால்தான் ஜெயிச்சோம் என்றாலும் நமக்கு எந்த பங்களிப்பும் இல்லை என சிலர் சித்தரிக்கிறார்கள்.

அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. நமக்கென்று ஒரு வாக்கு வங்கி இப்போதைய காலகட்டத்தில் இல்லை என ஏற்றுக் கொண்டாலும், நடந்து முடிந்த தேர்தலில் சிறுபான்மையினர் நமது அணிக்கு நம்பிக்கையோடு வாக்களித்தார்கள் என்றால் அது மத்தியிலேயே காங்கிரஸ் ஆட்சி வரவேண்டும், ராகுல் காந்தி பிரதமராக வரவேண்டும் என்று தான் வாக்களித்தார்கள். வாக்கு வங்கி வேண்டுமென்றால் காங்கிரஸ் கட்சிக்கு குறைந்திருக்கலாம்.

ஒரு காலத்தில் தமிழ்நாட்டில் பிரதான கட்சியாக காங்கிரஸ் இருந்தது. அதன் பின்னர் இரண்டாவது, மூன்றாவது கட்சியாகவும் இருந்து அந்த நிலை மாறிப் போய் உள்ளது. கூட்டணி கட்சியால்தான் வெற்றி பெற்றோம், மாதம் மகளிருக்கான ஆயிரம் ரூபாய் உதவித் திட்டம் மூலம் கணிசமாக வாக்குகளைப் பெற்றோம் என்பதை ஒத்துக் கொள்கிறேன். முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்திற்கு நல்ல வரவேற்பு உள்ளது என்பதை ஒப்புக்கொள்கிறேன். அதையெல்லாம் மனதார பாராட்டுகிறேன்.

ஆனால்,  அரசாங்கத்தில் நமக்கு பங்கு இல்லை என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். அரசியலில் எதிர்க்கட்சியாக இருக்க வேண்டும், ஆளுங்கட்சியாக இருக்க வேண்டும், இதில் இரண்டும் இருக்கும் கட்சியாக காங்கிரஸ் உள்ளது. அதனால்தான் காங்கிரஸ் கட்சியை தேர்தல் நேரத்தில் மட்டும் சேர்த்துக் கொள்கிறார்கள். தேர்தல் இல்லாத இடங்களில் நம்முடைய மதிப்பு என்ன என்பது யாருக்கும் தெரியாமல் போய்விடுகிறது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரைக்கும் காங்கிரஸ் கட்சி பேச வேண்டியது நிறைய உள்ளது. ஒரு பொறுப்பான அரசியல் கட்சியாக மக்கள் கவனத்தை ஏற்க வேண்டிய கட்சியாக இருக்க வேண்டுமென்றால், சில விஷயங்களை நாம் பேசித்தான் ஆக வேண்டும். திருநெல்வேலி காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் இதுவரைக்கும் யாரையும் கைது செய்யவில்லை. ஆனால் அதைப் பற்றி காங்கிரஸ் கட்சி பேசுவது கிடையாது. இது மட்டுமின்றி, தற்போது கூலிப்படை கொலைகள் அதிகரித்துள்ளது. இதைப் பற்றி எல்லாம் காங்கிரஸ் கட்சி பேச வேண்டும்.

காவல்துறை என்கவுண்டர் செய்து சட்டத்தை காப்பாற்றுவதாக நினைக்க வேண்டாம். வழக்குகளை முடிப்பதற்காகவே என்கவுண்டர்கள் செய்யப்படுவதாக பரவலாக பேசப்படுவதாக கூறினர். இதேபோன்று மின் கட்டண உயர்வை குறித்தும் காங்கிரஸ் கட்சி பேசித்தான் ஆக வேண்டும்.

மக்கள் மனதில் காங்கிரஸ் கட்சி இடம் பிடிக்க வேண்டும் என்றால் அன்றாடம் மக்கள் பிரச்னைகளை பற்றி பேசியே ஆக வேண்டும். இளைஞர்கள் சீமான் கட்சிக்கும், நடிகர் விஜய் கட்சிக்கும் செல்வதற்கான காரணம் நடைமுறை அரசியலில் உள்ள பிரச்னைகள், சமுதாய பிரச்னைகள், உண்மைக்காக, மௌனமாக இருப்பதால்தான் இந்த நிலை நமக்கு வருகிறது.

அரசியல் கட்சி என்ற முறையில் நம்முடைய கருத்தை பதிவு செய்யாமல் அன்றாட பிரச்னையை முன் வைக்காமல் நாம் இருந்தோம் என்றால், மக்கள் கவனத்தில் நாம் இருக்க மாட்டோம். வாடிக்கையான அரசியலில் இருந்து நாம் மாற்றம் கொண்டு வர வேண்டும், அது மேலிடத்திலிருந்து மாற்றம் வந்தால் தான் கீழே மாற்றம் இருக்கும் என்று பேசினார்.ஹ

அவரது இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் காங்கிரஸ் மேலிடம் இது குறித்து விசாரணை செய்து அறிக்கை அனுப்ப உத்தரவிட்டிருந்தது. 

இவிகேஎஸ் இளங்கோவன் கூறிய பதில்

இந்த நிலையில்  கார்த்தி சிதம்பரம் பேச்சு குறித்து,  ஈவிகேஎஸ் இளங்கோவன் கருத்து தெரிவித்த போது சிவகங்கையில் கார்த்தி சிதம்பரத்திற்கு சீட் கொடுக்க கூடாது என்று பலர் டெல்லி சென்று புகார் அளித்தனர். அதையும் மீறி அவருக்கு வாய்ப்பு கிடைத்தது, மேலும், சிவகங்கையில் போட்டியிட்ட   அவரது வெற்றிக்கு முழுக்க முழுக்க திமுகதான்  உழைத்தது , திமுக அவருக்கு உதவி செய்யவில்லை என்றால் அவர் டெபாசிட் பெறுவது பெறுவதே பெரிய விஷயமாக இருந்தது’ என்று  கூறியிருந்தார்.

இவிகேஎஸ் இளங்கோவனின் இந்த  செயல் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், தற்போது, இவிகேஎஸ்-க்கு கார்த்தி சிதம்பரம் காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார்.