ஐசிசி உலகக்கோப்பை ஒருநாள் போட்டித் தொடர் ஆரம்பிக்க இன்னும் ஒருவாரமே உள்ள நிலையில் உலகம் முழுவதும் இருந்து கிரிக்கெட் ரசிகர்கள் இந்தியா வரத் துவங்கியுள்ளனர்.
2019 உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் மோதிய இங்கிலாந்து மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் போட்டியுடன் 2023 உலகக்கோப்பை போட்டிகள் அக்டோபர் 5 ம் தேதி அகமதாபாத் நகரில் துவங்க உள்ளது.
முழுக்க முழுக்க இந்தியாவில் நடைபெற உள்ள இந்த தொடருக்கான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தற்போது இந்த தொடருக்கான தொலைக்காட்சி வர்ணனையாளர்கள் பட்டியல் வெளியாகி உள்ளது. மொத்தம் 25 முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர்களில் 9 பேர் சிறப்பு வர்ணனையாளர்களாக இடம்பெறுவார்கள்,
போட்டி துவங்குவதற்கு முன்னும் இடைவேளையின் போதும் பின்னர் போட்டி முடிந்த பின்னும் போட்டி குறித்த சிறப்பு வர்ணனையை முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் மற்றும் முன்னாள் இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன் ஆகியோருடன் சேர்ந்து ஷேன் வாட்சன், லிசா ஸ்தலேகர், ரமீஸ் ராஜா, ஆரோன் பிஞ்ச், மேத்யூ ஹைடன் ரவி சாஸ்திரி மற்றும் சுனில் கவாஸ்கர் ஆகியோர் வழங்க உள்ளனர்.
போட்டி வர்ணனையாளர்களாக சஞ்சய் மஞ்சரேக்கர், தினேஷ் கார்த்திக், நாசர் உசேன், இயன் ஸ்மித் இயன் பிஷப், வக்கார் யூனிஸ், ஷான் பொல்லாக், அஞ்சும் சோப்ரா மைக்கேல் அதர்டன் சைமன் டவுல், ம்புமெலெலோ ம்பாங்வா, கேட்டி மார்ட்டின், டிர்க் நான்ஸ், சாமுவேல் பத்ரி, அதர் அலி கான் மற்றும் ரஸ்ஸல் அர்னால்ட் ஆகியோர் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
அந்தந்த தொலைக்காட்சி நிறுவனங்கள் சார்பில் வர்ணனை வழங்க உள்ள ஹர்ஷா போக்லே, காஸ் நைடூ, மார்க் நிக்கோலஸ், நடாலி ஜெர்மானோஸ், மார்க் ஹோவர்ட் மற்றும் இயன் வார்டு ஆகியோருடன் இணைந்து இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள ஐசிசி வர்ணனையாளர்கள் பணியாற்றுவார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.