டெல்லி: மதுபான கொள்கை ஊழல் தொடர்பாக, ஏற்கனவே டெல்லி துணைமுதலமைச்சர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் ஆஜராக அமலாக்கத்துறை 2வது முறையாக சம்மன் அனுப்பி உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டெல்லியில் முதல்வர் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த அரசு கடந்த 2021-2022 காலக்கட்டத்தில் புதிய மதுபானக் கொள்கையை அறிவித்தது. அதன்படி, தனியார் மதுபான விற்பனையாளர்களுக்கு அனுமதி அளித்தது. இந்த விவகாரத்தில் ஆம் ஆத்மி அரசு லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து, டெல்லி துணை நிலை ஆளுநர், இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டார். அதன்படி, சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்தது. மேலும், சட்ட விரோதப் பணப் பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத்துறையும் வழக்குப் பதிவு செய்தது. இவ்வழக்கில் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு, ஆம் ஆத்மி கட்சியை மிக பெரிய நெருக்கடியில் தள்ளியுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக,  ஆம் ஆத்மி கட்சியில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அடுத்தபடியாக இருந்த மணிஷ் சிசோடியாவுக்கு எதிராக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்து சிறையில் அடைத்து, பின்னர் காவலில் எடுத்து விசாரித்து வருகிறது.

அதைத் தொடர்ந்து, ஆம்ஆத்மி கட்சி எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் அமைச்சர்களிடம் விசாரணை நடத்தியது. இந்த நிலையில்,  டெல்லி அரசின் கலால் கொள்கை ஊழல் குற்றச்சாட்டு வழக்கில், விசாரணை நடத்துவதற்கு டிசம்பர் 21-ம் தேதி நேரில் ஆஜராகுமாறு டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை புதிதாக சம்மன் அனுப்பி இருக்கிறது.

ஏற்கனவே இந்த வழக்கு தொடர்பாக கடந்த ஏப்ரல் மாதம், கெஜ்ரிவாலிடம் இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ 9 மணி நேரம் விசாரணை நடத்தியது. இதற்கு கடுமை யாக எதிர்வினையாற்றியிருந்த கெஜ்ரிவால், “சிபிஐ என்னிடம் 56 கேள்விகளைக் கேட்டது. ஆனால், அனைத்தும் தவறான கேள்விகள். அவர்களிடம் எதுவும் இல்லை என எனக்கு இதில் தெரிந்துவிட்டது. ஒரு ஆதாரமும் இல்லை என்று நான் உறுதியாக நம்புகிறேன்” என்றார். அதையடுத்து,   கடந்த (2023) நவம்பர் 2-ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. ஆனால், அந்த சம்மன் தெளிவற்றதாகவும், அரசியல் உள்நோக்கத்தோடு இருந்ததாகவும் கூறி அரவிந்த் கெஜ்ரிவால் விசாரணைக்கு ஆஜராகாமல் தவிர்த்தார். இதைத் தொடர்ந்து, அமலாக்கத்துறை தற்போது மீண்டும் புதிதாக சம்மன் அனுப்பி இருக்கிறது. அதில், டிசம்பர் 21-ம் தேதி நடைபெறும் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஆனால், அரவிந்த் கெஜ்ரிவால் விசாரணைக்கு ஆஜராக மாட்டார் என்றும், அவர் பெயர் குறிப்பிடப்படாதக இடத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள 19-ம் தேதி செல்கிறார் என்றும் ஆம் ஆத்மி கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மாநில முதலமைச்சரை கைது செய்வது என்பது எளிதான காரியம் அல்ல. பல நடைமுறைகள் உள்ளன. மாநிலத்தின் நிர்வாகமே முடங்க வாய்ப்புள்ளது. அப்படி கைது செய்யப்பட்டால், தனது முதலமைச்சர் பதவியை அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்வாரா? இல்லை அந்த பதவியில் தொடர்வாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

மத்திய புலனாய்வு அமைப்புகள் மூலம் எதிர்க்கட்சிகளை பாஜக அரசு மிரட்டுவதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் பல எதிர்க்கட்சி தலைவர்களின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி கைது செய்து வருவது வாடிக்கையாக உள்ளது.