சென்னை:
“தனித்து நின்றால் எப்படி செயல்பாடோ அவ்வாறு செயல்பட்டு  கட்சியை வலுப்படுத்துவதுதான் எங்களது முதற்கட்ட வேலை” என்று தெரிவித்திருக்கிறார் த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன். இதன் மூலம், தனது பாணியில் மக்கள் நலக்கூட்டணியில் இருந்து விலகியதை அறிவித்திருக்கிறார் அவர். 
கடந்த சட்டசபை தேர்தலில் மக்கள் நலக்கூட்டணியுடன் கூட்டணி வைத்து படுதோல்வியை சந்தித்தது த.மா.காங்கிரஸ். அப்போதிலிருந்தே, கூட்டணியைவிட்டு த.மா.கா விலகும் என்றும், தி.மு.க.வுடன் கூட்டணி வைத்து வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலை சந்திக்கும் என்றும் தகவல் பரவியது.
download
இதற்கிடையே தனது கட்சி நிர்வாகிகளுடன் தொடர்ந்து வாசன் ஆலோசனை நடத்தி வந்தார். இந்த நிலையில் சென்னையில் அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:
“மரியாதைக்குரிய வைகோ , ஜி.ஆர். முத்தரசன், திருமாவளவன் உள்ளிட்டோர் கடந்த ஜனவரி மாதம் மக்கள் நலக்கூட்டணியில் இணைய கேட்டுகொண்டதன் அடிப்படையில் தமாகா தொகுதி உடன்படிக்கைக் உடன் பாடு வைத்து கொண்டது. கூட்டணியில் இருந்தாலும் தனித்தனி தேர்தல் அறிக்கை வெளியிட்டோம்.
எனவே எங்களது ஆறு கட்ட ஆலோசனை கூட்டத்தில் மக்கள் நலக்கூட்டணி தொடருமா? தொடராதா? என்ற பேச்சு எழவில்லை. தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் மக்கள் நலக்கூட்டணிக்கு நன்றியும் தெரிவித்துள்ளோம்.
தற்போது எங்கள் தலைவர்கள் கூறியது என்னவென்றால், கூட்டணி என்பது  தேர்தல்களில் வரும் போகும்.   கட்சியை பலப்படுத்தும் வேலையில் தற்போது ஈடுபட வேண்டும் என்பதுதான்.
உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு இப்போது வரவில்லை, ஆகவே உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வரும் நேரத்தில் அது குறித்த  முடிவு எடுக்க்கலாம் என ஆலோசிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய எங்களது நிலைபாடு தனித்து நின்றால் எப்படி செயல்பாடுவோமோ, அது போல செயல்பட்டு . கட்சியை வலுப்படுத்துவதுதான் முதற்கட்ட வேலை என்று தீர்மானித்துள்ளோம்.  32 மாவட்டங்களின் மூத்த முன்னணி, மாநில மாவட்ட மற்றும் அமைப்புகளின் நிர்வாகிகளை சந்தித்து பேச இருக்கிறேன்.  ஜூலை மாத இறுதிக்குள் இந்த கூட்டங்கள் முடிவடையும்” என்று ஜி.கே. வாசன் தெரிவித்தார்.
இதன் மூலம் மக்கள் நலக்கூட்டணியில் தாங்கள் இப்போது இல்லை என்பதை வாசன் அவர் பாணியில் தெரிவித்துள்ளார் என்று அரசியல்வட்டாரத்தில் பேசப்படுகிறது.