சென்னை

சென்னை ராமாபுரம் பகுதியில் தரமற்ற பொருட்களால் கட்டப்பட்ட குடியிருப்புக்கள் தொட்டாலே உதிரும் நிலையில் உள்ளன.

கடந்த அதிமுக ஆட்சியில் சென்னை புளியந்தோப்பு பகுதியில் தமிழக குடிசை மாற்று வாரியம் கே பி பூங்கா என்னும் இடத்தில் ஒரு அடுக்குமாடி கட்டிடத்தைக் கட்டியது.   இந்த கட்டிடத்தின் சுவர்கள் மற்றும் படிக்கட்டுக்கள் உள்ளிட்ட பலவற்றிலும் தரமற்ற பொருட்கள் பயன்படுத்தப்பட்டதால் உதிர்ந்து விழுந்தன.  அந்த கட்டிடத்தை அமைச்சர்களும் ஐஐடி குழுவினரும் ஆய்வு செய்துள்ளனர்.

இதைப் போல் சென்னை வளசரவாக்கம் அருகே தமிழக விட்டு வசதி வாரியம் கேகே நகர் கோட்டம் மூலம் ராமாபுரத்தில் உள்ள பாரதி சாலையில் கட்டப்பட்டுள்ள 304 அடுக்குமாடிக் குடியிருப்புக்கள் குறித்தும் புகார்கள் எழுந்துள்ளன.   இந்த குடியிருப்புக்கள் ரூ.79.44 கோடி செலவில் சுயநிதி பிரிவு மூலம் கட்டப்பட்டதாகும்.   இவை கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பயனாளிகளுக்கு அளிக்கப்பட்டது.

இந்த கட்டிடத்தின் சுவர்கள் தற்போது லேசாகத் தொட்டாலே சிமெண்ட் பூச்சுகள் உதிர்கின்றன.  மேலும் உள்ளிருக்கும் தரமற்ற மணலும் பொல பொல என உதிர்கின்றன.   மேலும் இந்த கட்டிடத்தில் உள்ள லிஃப்ட், மின்சார ஒயர்கள், குடிநீர் குழாய்கள்,  கழிவுநீர் குழாய்கள் உள்ளிட்ட அனைத்தும் மோசமாகக் காணப்படுகின்றன.  மக்கள் இந்த குடியிருப்பு எந்த நிமிடத்திலும் இடிந்து விழலாம் என அச்சமடைந்துள்ளனர்.