கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயில் ராஜகோபுரத்தில் விழும் நிலையில் உள்ள இடிதாங்கியை விரைந்து சீரமைக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கும்பகோணத்தில் உள்ள ஆதிகும்பேஸ்வரர் கோயில் முதன்முதலாக தோன்றியதாக வரலாறு. இந்த கோயிலுக்கு தினம்தோறும் திரளான பக்தர்கள் வந்து செல்கின்றனர். சிறப்பு பெற்ற கோயிலில் 12 ஆண்டுக்கு ஒருமுறை வரும் மாசி மகாமகமும், ஆண்டுதோறும் வரும் மாசிமகமும் விமரிசையாக நடைபெறும். 2015ம் ஆண்டு திருப்பணி செய்யப்பட்டு கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் ராஜகோபுரத்தின் மேலே கலசத்தின் அருகில் உள்ள இடிதாங்கியின் கீழ்பாகம் அரித்து எப்போது விழுமோ என்ற நிலையில் உள்ளது. பலத்த காற்று அடிக்கும்போது இடிதாங்கி கீழே விழுந்தால் பெரும் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயில் ராஜகோபுரம் கலசத்தின்கீழ் அரித்து எப்போது விழுமோ என்ற நிலையில் இடிதாங்கியை விரைந்து சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயிலின் ராஜகோபுரம் 173 அடி உயரம் கொண்டதாகும். 9 மாடங்கள், 9 கலசங்கள் உள்ளன. மழை காலங்களில் இடி, மின்னல் தாக்கினால் கோபுரத்திலுள்ள கலசங்கள், பொம்மைகள், சிற்பங்கள் சேதமடையக்கூடாது என்பதற்காக 20 அடி உயரத்தில் இடிதாங்கி, கோயில் கும்பாபிஷேகத்துக்கு முன் அமைக்கப்பட்டது. ஆனால் இடிதாங்கியை போதுமான வகையில் சிமென்ட் கான்கிரீட்டால் அமைக்காமல் கம்பியை வைத்து கட்டி வைத்துள்ளனர். அந்த கம்பிகள் துருபிடித்து அரித்ததால் இடிதாங்கி சாய்ந்து நிற்கிறது. தற்போது ஆடி காற்று பலமாக அடித்து வரும் நிலையில் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ள இடிதாங்கியை சீரமைக்க வேண்டும். இடிதாங்கி கீழே விழுந்தால் பெரும் அசம்பாவிதம் ஏற்படும். எனவே கும்பேஸ்வரர் கோயிலின் கோபுரத்தில் ஆபத்தான நிலையில் உள்ள இடிதாங்கியை கோயில் நிர்வாகம் விரைந்து சீரமைக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.