சென்னை,

சென்னை அருகே  காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம் கல்லூரியில் மாணவ மாணவிகள் மர்மமான முறையில் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருகிறது. இன்று மாணவர் ஒருவர் 15வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த 3 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். ஏற்கனவே திருவள்ளூரை சேர்ந்த மாணவி ஒருவர் மற்றும் ஆந்திராவை சேர்ந்த மாணவர் ஆகிய இருவரும் தற்கொலை செய்து கொண்ட நிலையில், தற்போது, குமரி மாவட்டத்தை சேர்ந்த மாணவர் ஒருவர் இன்று தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

ஐக்கிய ஜனநாயக கட்சித்தலைவர் பாரிவேந்தர் எனப்படும் பச்சமுத்துக்கு சொந்தமான எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் மாணவ, மாணவிகள் தற்கொலை செய்துகொண்டு வருவது வாடிக்கை யாகி வருகிறது.  இதுகுறித்து காவல்துறை சரியான முறையில்  நடவடிக்கை எடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் அந்த பகுதி மக்களால் கூறப்பட்டு வருகிறது.  அங்கு நடை பெற்று வரும் மரணங்கள் அனைத்தும் மர்மமாகவே இருப்பதாக அங்கு படிக்கும் மாணவர்கள் கல்லூரி நிர்வாகம் மீது குற்றச்சாட்டு சுமத்தி வருகின்றனர்.

இந்த நிலையில்,  , எஸ்.ஆர்.எம். கல்லூரியில் ஐ.டி.பிரிவில் 4-ம் ஆண்டு படித்து வந்த குமரி மாவட்டத்தை சேர்ந்த ராகவன் என்ற மாணவர் திடீரென தற்கொலை செய்துள்ளது, மற்ற மாணவர்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

அதையடுத்து கல்லூரி நிர்வாகத்துக்கு எதிராக அவர்கள் போராட்டத்தில் குதிக்கக்கூடும் என்பதால், பல்கலைக்கழக வளாகத்தில் போலீசாரை குவித்து வருகிறது எஸ்ஆர்எம் பல்கலைக்கழக நிர்வாகம்.

எஸ்ஆர்எம் பல்கலைக்கழக வாளகத்தில் இதுவரை நடைபெற்றுள்ள நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் தற்கொலைகள் குறித்து விசாரித்து, தகுந்த நடவடிக்கை எடுக்க  மாநில, மத்திய அரசுகள்  முன்வருவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.