2018 ம் ஆண்டு அக்டோபர் மாதம் சென்னை திருவான்மியூரில் ஐ.டி. நிறுவன ஊழியர் கொல்லப்பட்ட வழக்கில் கொலை செய்யப்பட்டவரின் மனைவியும் அவளது காதலனும் கொலை குற்றவாளிகள் என்று நிரூபிக்கப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சிறுசேரியில் உள்ள டி.சி.எஸ். நிறுவனத்தில் பணிபுரிந்த மென்பொறியாளர் கதிரவன் கொலை வழக்கில் வினோதினி மற்றும் ஜெகன் இருவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி முதன்மை கூடுதல் நீதிமன்றம் கடந்த வாரம் தீர்ப்பு வழங்கியது.
2018 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12 ம் தேதி தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் எம்.சி.ஏ. பட்டதாரியான வினோதினிக்கு மென்பொறியாளர் கதிரவனுடன் சிறப்பாக திருமணம் நடைபெற்றது.
திருமணமான உடன் ஏலகிரி-க்கு தேனிலவுக்கு சென்று வந்த ஓரிரு நாட்களிலேயே கணவனுடன் சண்டை போட்டுக்கொண்டு வினோதினி தனது உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார்.
இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டதை அடுத்து உறவினர்கள் சமாதானம் செய்து வைக்க அக்டோபர் 12 ம் தேதி சென்னை பல்லாவரத்தில் உள்ள கதிரவன் வீட்டிற்கு மீண்டும் திரும்பினார் வினோதினி.
கணவனும் மனைவியும் சகஜமாக இருந்த நிலையில் அன்று மாலை திரையரங்கில் சினிமா பார்க்கச் சென்றுள்ளனர். அப்போது மறுநாள் திருவான்மியூரில் தனது நண்பர் ஒருவரை பார்க்க செல்லவேண்டும் என்று வினோதினி கூறியுள்ளார்.
மனைவியின் நண்பரை பார்க்க அக்டோபர் 13 ம் தேதி திருவான்மியூர் அழைத்துச் சென்ற கதிரவனை அதிக ஆள்நடமாட்டமில்லாத ஒதுக்குப்புறமான கடற்கரை பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்த இருவரும் பின்னர் மணற்பரப்பில் கதிரவனின் கண்ணை கட்டி விட்டு விளையாடிக் கொண்டிருந்தனர் அப்போது திடீரென பின்மண்டையில் தாக்கப்பட்டு ரத்தவெள்ளத்தில் சரிந்தார் கதிரவன்.
கணவன் ரத்தவெள்ளத்தில் இருந்ததை பார்த்து அதிர்ச்சியுற்ற வினோதினி அவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்ததோடு அடையாளம் தெரியாத இருவர் தன்னையும் தனது கணவரையும் தாக்கி தனது தாலி மற்றும் மொபைல் போன் ஆகியவற்றை வழிப்பறி செய்ததாகவும் அவர்கள் தாக்கியதில் கதிரவனுக்கு அடிபட்டுவிட்டதாகவும் கூறினார்.
போலீசார் நடத்திய விசாரணையிலும் வினோதினி இதையே கூறிய நிலையில், திருவான்மியூர் கடற்கரைக்குச் சென்று விசாரணையை துவங்கிய காவல்துறையினரிடம் அந்த இடத்தில் மூன்று பேர் இருந்ததை பார்த்ததாக அன்று அங்கு சென்ற ஒரு ஜோடி தெரிவித்துள்ளது.
தவிர அங்கிருந்த மீனவர்கள் சிலரும் மணற்பாங்கான மேட்டுப் பகுதியை நோக்கி ஒரு ஆள் சென்றுவந்ததை பார்த்ததாக கூறியுள்ளனர்.
இதனை அடுத்து அருகில் உள்ள ஒரு கோவிலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்த போலீசார் குறிப்பிட்ட நேரத்தில் அந்த பகுதிக்கு சம்பந்தம் இல்லாத சந்தேகப்படும்படியான நபரின் நடமாட்டத்தை ஆய்வு செய்தது.
தலையில் அடிபட்ட கதிரவன் ஓரிரு நாளில் அக்டோபர் 15ம் தேதி இறந்ததை அடுத்து மருத்துவர்கள் அளித்த அறிக்கையில் கொலை செய்யும் நோக்கில் தாக்கப்பட்டதாக தெரிவித்திருந்தனர்.
மருத்துவமனையில் கதிரவனின் உறவினர்கள் மற்றும் வினோதினி உள்ளிட்ட ஏராளமானோர் கூடியிருந்த நிலையில் சிசிடிவி பதிவுகளில் இருந்த சந்தேகப்படும் நபர்களின் புகைப்படத்தை வினோதினியிடம் காட்டிய போலீசார் அதில் ஒரு குறிப்பிட்ட இளைஞரை காட்டி இவர் தான் கதிரவனைத் தாக்கியவர் என்று போலீசார் கூறியதற்கு வினோதினி இவர் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
பின்னர், அங்கிருந்த கதிரவனின் உறவினர்கள் இந்த புகைப்படங்களைப் பார்த்து அதில் வினோதினி இல்லை என்று மறுத்த நபரை கதிரவன் – வினோதினி நிச்சயதார்த்தம் மற்றும் திருமணத்தில் பார்த்ததாகவும் இவர் வினோதினியின் நண்பர் என்றும் கூறினார்.
இதனை அடுத்து வினோதினியின் மீது காவல்துறையினரின் சந்தேகம் விழுந்ததைத் தொடர்ந்து அவரது செல்போன் தரவுகள் ஆய்வு செய்யப்பட்டது.
அதில் அக்டோபர் 1 முதல் 13 ம் தேதி வரை ஒரு குறிப்பிட்ட எண்ணுக்கு 55 முறை பேசியிருப்பது தெரியவந்தது. பல்லாவரத்தில் உள்ள மாமியார் வீட்டுக்கு வினோதினி திரும்பி வந்த அக்டோபர் 12 ம் தேதி மட்டும் 35 முறை அந்த எண்ணுக்கு பேசியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து அந்த எண்ணுக்கு உரிய நபர் குறித்த விசாரணையில் இறங்கிய போலீசார் அது மதுரையில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வரும் அந்தோணி ஜெகன் என்பவருக்கு சொந்தமானது என்று தெரியவந்தது.
போலீசார் மதுரைக்கு செல்லும் முன்பே அவருக்கு தகவல் கசிந்த நிலையில் அவர் தங்கியிருந்த விடுதிக்கு வெளியில் காத்திருந்த போலீசார் டீ குடிக்க வெளியில் வந்த ஜெகனை கோழிபோல் அமுக்கினர்.
அக்டோபர் 14ம் தேதி ஜெகனை கைது செய்த நிலையில் கதிரவன் தாக்கப்பட்ட அக்டோபர் 13ம் தேதி ஜெகனுக்கு 126 எஸ்.எம்.எஸ். க்களை வினோதினி அனுப்பியுள்ளார், பதிலுக்கு ஜெகன் 86 முறை எஸ்.எம்.எஸ். அனுப்பியுள்ளார்.
இருவரிடமும் காவல்துறை மேற்கொண்ட விசாரணையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. வரலாறு படித்து வந்த தன்னை விட மூன்று வயது இளையவரான ஜெகன் மீது வினோதினிக்கு காதல் இருந்ததாகவும் திடீரென தனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டதால் கணவரை தீர்த்துக்கட்ட இருவரும் திட்டம் போட்டதும் அம்பலமானது.
ஏலகிரிக்கு தேனிலவுக்கு சென்றபோதே கதிரவனை கொலை செய்ய திட்டமிட்டதாகவும் அது முடியாமல் போனதாகவும் கூறியுள்ளனர்.
செல்போன் மற்றும் சி.சி.டி.வி ஆதாரங்களை வைத்து இருவர் மீதும் கொலை குற்றம் சாட்டப்பட்ட நிலையில் வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
குற்றம்சாட்டப்பட்டவர்கள் சார்பாக ஆஜரான வழக்கறிஞர்கள் அவர்களுக்கு சாதகமாக சில வாதங்களை முன்வைத்தபோதும் ஏலகிரியில் வினோதினி – கதிரவன் தங்கியிருந்த அதே தேதியில் அதே ஹோட்டலில் ஜெகனும் தங்கியது குறித்த சி.சி.டி.வி. ஆதாரங்களை சமர்ப்பித்த காவல்துறை அவர் எதற்காக அங்கு வந்தார் என்ற கேள்விக்கு விளக்கம் தரமுடியாமல் திணறியது.
தவிர, கதிரவன் தாக்கப்பட்ட அக்டோபர் 13 ம் தேதி ஜெகன் எதற்காக மதுரையில் இருந்து சென்னைக்கு வந்து அதே தினம் மீண்டும் மதுரைக்கு திரும்பினார் என்பதற்கும் குற்றவாளிகள் தரப்பில் போதிய விளக்கம் தரப்படவில்லை.
சி.சி.டி.வி. காட்சிகள் மற்றும் தொலைபேசி உரையாடல்கள் மற்றும் குறுஞ்செய்திகள் அனைத்தும் வினோதினி மற்றும் ஜெகன் ஆகிய இருவரும் தான் குற்றவாளிகள் என்பதை உறுதிப்படுத்திய நிலையில் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த வாரம் இந்த இரண்டு பேருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி முதன்மை கூடுதல் நீதிபதி தங்கமாரியப்பன் தீர்ப்பளித்தார்.
2018 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஏலகிரியில் உள்ள எமரால்டு ஹோட்டல் வரவேற்பறையில் ஜெகன் மற்றும் வினோதினி இருவரும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த சி.சி.டி.வி. காட்சி அதன் ஹார்ட் டிஸ்க்கில் இருந்து தானாக நீங்குவதற்கு முன் சரியான நேரத்தில் அந்த காட்சிகளை காவல்துறையினர் கைப்பற்றியதாக இந்த வழக்கின் விசாரணை அதிகாரியான காவல்துறை ஆய்வாளர் கிறிஸ்டின் ஜெயசில் கூறியுள்ளார்.
தற்போது காவல்துறை உதவி ஆணையராக இருக்கும் ஜெயசில் சம்பவம் நடைபெற்ற போது திருவான்மியூர் காவல்நிலைய ஆய்வாளராக இருந்தார்.
கொலைக்கு பயன்படுத்தப்பட்ட சுத்தி மற்றும் அருவாள் தவிர மின்னணு சாதனங்களின் சாட்சியங்களை மட்டுமே வைத்து ஒரு கொலைக்குற்றம் நிரூபிக்கப்பட்டு குற்றவாளிக்கு தண்டனை வாங்கித் தந்திருப்பதாக கூறியுள்ள ஜெயசில் இது தனது பணிக்காலத்தில் சவாலான ஒரு வழக்காக குறிப்பிட்டுள்ளார்.
மதுரையில் மாணவர் விடுதியில் தங்கியிருந்த ஜெகனை எந்த சிக்கலும் இல்லாமல் கைது செய்த காவல்துறையினரை வெகுவாக பாராட்டிய அவர் குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கித் தரும் வரை அனைத்து நாட்களும் நீதிமன்றத்துக்கு ஆஜரான கதிரவனின் தந்தை சண்முகசுந்தரத்தின் மனஉறுதியால் மட்டுமே குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கித் தர முடிந்ததாக கூறினார்.