டெல்லி: தமிழகத்திற்கு மத்திய நிதி அமைச்சகம் ரூ.1,188 கோடி ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை  விடுவித்துள்ளது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தலைமையில், நேற்று டெல்லியில் பட்ஜெட்டுக்கு முந்தையா கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல்ராஜன், தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி வரி வருவாய் இழப்பீடு நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இதைத்தொடர்ந்து, மத்தியஅரசு  ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான காலாண்டிற்கான ஜிஎஸ்டி நிலுவைத் தொகையாக மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 17,000 கோடி ரூபாயை  விடுவித்துள்ளது. இதில் தமிழகத்திற்கு 1,188 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.

இதுகுறித்து மத்தியஅரசு வெளியிட்டுள்ள தகவலில்,  2022-2023்ம் நிதியாண்டில் இதுவரை 1,15,662 கோடி ரூபாய் அளவிற்கு மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஜிஎஸ்டி வரிவருவாய் இழப்பீட்டு தொகை வழங்கியுள்ளதாக  தெரிவித்துள்ளது. மாநிங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காக வசூலிக்கப்படும் செஸ் வரி கடந்த அக்டோபர் வரை 72,147 கோடி ரூபாய்தான் வசூலிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ள நிதியமைச்சகம், எஞ்சிய தொகையான 43,515 கோடி ரூபாயை மத்தியஅரசு தனது சொந்த நிதி ஆதாரங்களிலிருந்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கியிருப்பதாக தெரிவித்துள்ளது.

மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துவதற்காக இந்த நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டதாகவும் நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.