சென்னை: ஆயுள் முழுவதும் சிறை தண்டனை அனுபவிப்பதே ஆயுள் தண்டனை என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

கோவை ஆர்எஸ்எஸ் பிரமுகர் கொலை வழக்கில் பலருக்கு தண்டனை அளிக்கப்பட்டது. முக்கிய குற்றவாளியான யாசுதீன் என்பவருக்கு நீதி மன்றம்  ஆயுள் தண்டனை அளித்தது. ஆனால்,  தமிழகஅரசு தலைவர்கள் பிறந்தநாளை காரணம் காட்டியும், கைதிகளின் நன்னடத்தை காரண மாகவும் 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வாடும் கைதிகளை விடுவித்து வருகிறது. அதன்படி, யாசுதீனையும் விடுவிக்க வேண்டும் என்று அவரது சார்பில், முஸ்லிம் கட்சிகள் சார்பிலும் தமிழகஅரசுக்கு வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால், அதை ஏற்க தமிழக அரசு மறுத்து விட்டது.

இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் யாசுதீன் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், இது தொடர்பான தமிழகஅரசின்  உத்தரவில் தலையிட முடியாது என்று தெரிவித்ததுடன், ஆயுள் தண்டனை என்பது ஆயுள் முழுவதும் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்பதே என்று அறிவுறுத்தியது.

மேலும், ஆயுள் தண்டனை பெற்ற கைதியை முன்கூட்டியே விடுதலை செய்யும்படி ஆளுநருக்கு உத்தரவிட முடியாது என்றும்  தெரிவித்துள்ளது.

ஆயுள் தண்டனை என்பது ஆயுள் முழுவதுவதற்குமான தண்டனையைக் குறிக்கும். ஆனால், ஆயுள் முழுவதும் எந்த கைதியும் இருப்ப தில்லை. அதிகபட்சம் பதினெட்டு இருபது ஆண்டுகளில் விடுதலைப் பெற்றுவிடுவார்கள். தண்டனைக் கைதியின் , நன்னடத்தையை அவ்வப்போது, சிறை அதிகாரிகள் ஆய்வு செய்து பத்தாண்டுகளுக்கு ஒருமுறை அரசுக்கு பரிந்துரைப்பார்கள். அதன்படி அவர்கள் 10 ஆண்டுகளுக்கு மேல் 20 ஆண்டுகளுக்குள் விடுவிக்கப்பட்டு வருகிறார்கள். ஆனால், சில வழக்குகளில், குற்றவாளிகள் சாகும்வரை சிறையில் இருக்கும்படி மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.