உலகளவில் அதிக ஆயுளுடன் வாழ்பவர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கும் சுவிசர்லாந்தில், கடந்த 2019 ம் ஆண்டு, ஆண்கள் சராசரியாக 81.9 வயது வரையும் பெண்கள் சராசரியாக 85.6 வயது வரையும் உயிரோடு இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவித்தன.

உயர்ந்த வாழ்க்கை தரம், சிறந்த உணவு மற்றும் மருத்துவ வசதி காரணமாக அதிக வாழ்நாளை கொண்டிருந்த இந்நாட்டில், வயதானவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வந்தது.

இந்நிலையில், சமீபத்தில் வெளியான சுவிசர்லாந்து மக்கள் தொகை கணக்கெடுப்பு அந்நாட்டு மக்களின் சராசரி வாழ்நாள் குறைந்து வருவதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

கொரோனா காரணமாக கடந்த ஆண்டு வயதான ஆண்களும் பெண்களும் கொத்து கொத்தாக பலியானதை தொடர்ந்து, இறப்பு விகிதம் அதிகரித்ததால், 2020 ம் ஆண்டு இங்குள்ள மக்களின் வாழ்நாள் வெகுவாக குறைந்திருப்பது தற்போது வெளியான அறிக்கையில் தெரியவந்திருக்கிறது.

சுமார் 87 லட்சம் மக்கள் தொகை கொண்ட சுவிசர்லாந்து நாட்டில், 2020 ம் ஆண்டு சுமார் 76,000 பேர் இறந்துள்ளனர். இது, 2019 ம் ஆண்டை விட 8200 அதிகம்.

இறந்தவர்களில் 75 சதவீதம் பேர் மூத்த குடிமக்கள் என்பதால், கடந்த ஆண்டு 83.75 ஆக இருந்த சராசரி வாழ்நாள் இந்த ஆண்டு 83.15 ஆக குறைந்துள்ளது, ஆண்களின் வாழ்நாள் 81.1 ஆண்டாகவும் பெண்களின் வாழ்நாள் 85.2 ஆண்டாகவும் உள்ளது.

மேலும், விவாகரத்து பெறுவது கடந்த ஆண்டை விட 5.4 சதவீதம் குறைந்துள்ள அதேவேளையில், திருமணம் செய்துகொள்வதும் 10.4 சதவீதம் குறைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா காரணமாக வீட்டில் இருந்து வேலை செய்யும் சூழல் நிலவுவதால், குடும்ப உறவு மேம்பட்டிருப்பது இங்குள்ள மக்களுக்கு மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது.