சென்னை: வள்ளலார் இராமலிங்க அடிகள் அவர்களின் நினைவை போற்றுவோம் என முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்னும் ஜீவகாருண்ய தத்துவத்தை உலகத்துக்கே வழங்கிய வள்ளலார் நினைவு தினம் இன்று. தான் உணர்ந்த, ‘இறைவன் ஒளி வடிவமானவர்’ என்ற பேருண்மையை உலக மக்களிடையே கொண்டு செல்லவேண்டி,  தான் பிறந்து வளர்ந்த  கடலூர் மாவட்டம், மருதூர் கிராமத்தில்  ‘சத்திய ஞான சபை’யைத் தோற்றுவித்தார். அதன் அருகிலேயே ‘தர்ம சாலை’யை அமைத்து அன்னதானம் வழங்க வழிவகை செய்தார்.

இன்றுவரை அங்கு அன்னதானம் சிறப்பாக  வழங்கப்படுகிறது. வடலூர் அருகே இருக்கும் மேட்டுக்குப்பத்தில் வள்ளலார் ஸித்தி அடைந்தார். அவர் தோற்றுவித்த சத்திய ஞான சபையில், ஆண்டுதோறும் அவர் ஸித்தி அடைந்த தைப்பூசம் நாளில் ஜோதி தரிசனம் காண்பிக்கப்படுகிறது. இந்த ஆண்டு கொரோனா காரணமாக, பக்தர்கள் அனுமதியின்றி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், வல்லலாளர் குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின்  டிவிட் பதிவிட்டுள்ளார். அதில், ‘வாடிய பயிரைக் கண்டால் மனம் வாடும் இரக்கமும், பட்டினி வயிறுகளின் பசியாற்றிட அணையா அடுப்பு மூலம் உணவளிக்கும் கருணையும், சாதி பேதமற்ற சமரச சன்மார்க்க நெறியும் கொண்டவரான வடலூர் #வள்ளலார் இராமலிங்க அடிகள் அவர்களின் நினைவு போற்றி, அன்பும் மனிதநேயமும் தழைத்திடச் செய்திடுவோம்!’ என்று தெரிவித்துள்ளார்.