சென்னை: ராமராஜ்யங்கள் ராஜ்பவனுக்குள்ளேயே இருக்கட்டும் என மதுரை எம்பி. சு.வெங்கடேசன் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ள நிலையில்,  தமிழகம் விரைவில் ராம ராஜ்ஜியமாக மாறும் என முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் உள்ள ஸ்ரீ ராம் சமாஜத்தில்  நடைபெற்ற ராம நவமி விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற விழாவை துவங்கி வைத்த தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி நிகழ்ச்சியில் பேசும்போது,  இன்றைய மிக முக்கிய காலத்தில் நம்நாடு அனைவரின் வளர்ச்சியையும் உள்ளடக்கி ராமராஜ்யத்தை நோக்கி முன்னேறி வருவதாக தெரிவித்தார். இதுதொடர்பாக ராஜ்பவன் அலுவலக டிவிட்டிலும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

ஆளுநரின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பலர் ஆளுநரின் கருத்து குறித்து விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில்,  ஆளுநரின் பதிவை இணைத்து டிவிட்டரில்  மதுரை எம்.பி சு.வெங்கடேசன் பதிலடி கொடுத்துள்ளார்.

அவரது டிவிட்டில்,  உங்கள் ராமராஜ்யங்கள் ராஜ் பவனுக்குள்ளேயே இருக்கட்டும். அவை எப்போதும் ராஜ் பவனுக்கானவை மட்டுமே. இந்தியர்களுக்கானது அரசியல் சாசனமே, அந்தக் கனவே ஆளுநருக்கு தேவை என கடுமையாக விமர்சித்து பதிவிட்டுள்ளார்.

இது குறித்து மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த  அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, “பத்தாண்டு காலம் அதிமுக நடத்தியது ராம ராஜ்ஜியம், அப்போது அனைத்து மக்களும் சுபிட்சமாக நலமாக வாழ்ந்தார்கள், அதுவே ராமராஜ்ஜியம். திமுக ஆட்சியால் தமிழகம் கலியுகமாக மாறிவிட்டது. விரைவில் தமிழகம் ராமராஜ்ஜியமாக மாறும். எம்ஜிஆர் ஜெயலலிதா வழியில் அதிமுக விரைவில் ராமராஜ்ஜியத்தை கொடுக்கும்” என தெரிவித்தார்

திமுக அரசு  சொத்துவரியை உயர்த்தி வாக்களித்த மக்களுக்கு துரோகம் செய்துள்ளது என்றும், வாக்களித்த மக்களுக்கு இந்தளவுக்கு யாரும் துரோகம் செய்தது கிடையாது. அதிமுகவின் திட்டங்கள் அனைத்தும் புறக்கணிக்கப்பட்டு உள்ளது. தற்போது திமுக ஆட்சி காலத்தில் விலைவாசி விஷம் போல் ஏறிவிட்டது. திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து மக்கள் விரோத நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறுகிறது. கடந்த 11 மாத காலமாக மோசமான சூழ்நிலை தமிழகத்தில் நிலவுகிறது” என தெரிவித்தார்.