சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையின் 2வது நாள் கூட்டம் தொடங்கியது. இன்றைய கூட்டத்தில், எலியும் பூனையுமாக இருக்கும் எடப்பாடி பழனிசாமியும், ஒபிஎஸ்-சும் அருகருகே அமர்ந்துள்ளனர். எதிர்க்கட்சி துணைத்தலைவர் பிரச்சினை குறித்து கேள்வி நேரத்திற்கு பிறகு கேள்வி எழுப்பலாம் என அதிமுகவினருக்கு அப்பாவு பதில் கூறினார்.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய நிலையில், மறைந்த தலைவர்கள் எம்எல்ஏக்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு சபை ஒத்தி வைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து நடைபெற்ற அலுவல்ஆய்வு குழுவில் சபை 2 நாட்கள் நடத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன்படி, இன்றும், நாளையும் மட்டுமே சபை நடைபெற உள்ளது.
இந்த நிலையில், இன்று 2வது நாள் கூட்டத்தொடர்காலை 10மணிக்கு தொடங்கியது. ஏற்கனவே அதிமுகவில் சர்ச்சைகள் நீடித்து வரும் நிலையில், ஓபிஎஸ்-ஐ இடம்மாற்றுவது தொடர்பாக எடப்பாடியின் கோரிக்கையை சபாநாயகர் ஏற்க மறுத்து விட்டதால், எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, துணைத் தலைவர் பன்னீர்செல்வம் அடுத்தடுத்து இருக்கைகளில் அமர்ந்துள்ளனர். இரு தரப்பு எம்எல்ஏக்களும் சபைக்கு வந்துள்ளனர்.
முன்னதாக ஓபிஎஸ் இருக்கை தொடர்பாக அதிமுக எம்எல்எக்கள் இன்று காலை சபாநாயகரிடம் முறையிட்டனர். அப்போது, எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் தெரிவிப்பேன் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து அவையில் எடப்பாடி பழனிச்சாமி எதிர்க்கட்சி துணைத்தலைவர் குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு அனுமதி மறுத்த சபாநாயகர் கேள்வி நேரம் முடிந்த பிறகு கேள்வி எழுப்பலாம் என்றார். தொடர்ந்து அதிமுகவினர் கோஷம் எழுப்பினர். இதையடுத்து எச்சரிக்கை செய்த சபாநாயகர், எதிர்க்கட்சி துணைத்தலைவர் குறித்த முடிவு எப்படியும் இருக்கலாம் என்று எச்சரித்தார்.
சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளிக்கின்றனர். தொடர்ந்து, 2022 ஆம் ஆண்டு பல்கலை தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் சட்டங்கள் இரண்டாம் திருத்த சட்டம் முன்பதிவு உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அறிமுகம் செய்கிறார்.அத்துடன் தனியார் கல்லூரிகள் ஒழுங்குமுறை படுத்துதல் திருத்தம் முன் வடிவையும் அறிமுகம் செய்கிறார்.
தமிழ்நாடு வணிக எளிதாக்குதல் திருத்த சட்ட முன்வடிக்கை தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசும், தமிழ்நாடு ஒலிவுமறைவற்ற ஒப்பந்த பள்ளி திருத்த சட்டம் முன் வடிவை நிதித்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனும், 2022 – 23 ஆம் ஆண்டின் கூடுதல் செலவுகளுக்கான மாநில கோரிக்கைகள் ஆகியவற்றை நிதித்துறை அமைச்சர் முன்வைக்கிறார்.
அதைத்தொடர்ந்து, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி தாக்கல் செய்த அறிக்கை மற்றும் துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து அருணா ஜெகதீசன் அளித்த அறிக்கைகள் இன்று பேரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளன. இதன் மீது விவாதம் நடைபெறலாம் என்று தெரிகிறது.