டில்லி:

‘‘சட்ட விரோதமாக தங்கியுள்ளவர்களை அடையாளம் பார்த்து அவர்களை நாட்டை விட்டு வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

உள்துறை அமைச்சகம், மாநில அரசுகளுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ‘‘பல நாடுகளுடன் நாம் எல்லையைப் பகிர்ந்து கொள்கிறோம். அங்குள்ள பிரச்னைகளால் பலர் அத்துமீறி நுழைந்து, சட்டவிரோதமாக நம் நாட்டில் தங்கியுள்ளனர். சட்டவிரோதமாக குடியேறியவர்களை பயங்கரவாத அமைப்புகள் தங்கள் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துகின்றன.

இது, நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்களை அடையாளம் பார்த்து, அவர்களை வெளியேற்றும் நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்’’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘ மியான்மரின் ராகைன் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசித்து வருகின்றனர். ஜம்மு – காஷ்மீர், ஆந்திரா, ஹரியானா, உத்தர பிரதேசம், டில்லி, ராஜஸ்தான் மாநிலங்களில், 14 ஆயிரம் பேர் தங்கியிருப்பதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதேபோல் பலர் அத்துமீறி நுழைந்து, சட்டவிரோதமாக தங்யுள்ளனர். இவர்களுக்கு பணம் கொடுத்து தங்கள் பணிகளுக்கு, பயங்கரவாதிகள் பயன்படுத்துகின்றனர். இது, நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது. அதனால், சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்களை கண்டறிந்து வெளியேற்றும்படி, மாநில அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’’ என்றார்.