சென்னை:
குற்றவாளிகள், அரசியலுக்குள் வருவதை தடுக்க மத்திய அரசு சட்டம் கொண்டு வர வேண்டும் என சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.

புதுச்சேரியை சேர்ந்த ஜனா என்பவர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார். இதனை எதிர்த்து அவரது மனைவி ஜமுனா, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், வேலுமணி அமர்வு, அரசியல் பின்புலத்துடன் குற்றவாளிகள் பலர் புதுச்சேரியில் உலா வருகின்றனர். அரசியலுக்குள் நுழைவதன் மூலம் குற்றவாளிகள் கொள்கைகளை உருவாக்குபவர்களாக மாறுவது துரதிர்ஷ்டவசமானது.

குற்றவாளிகளுக்கு கட்சியில் இடமளிப்பது, தேர்தலில் போட்டியிட அனுமதிப்பது போன்றவற்றை கட்சிகளின் தலைவர்கள் தவிர்த்தால் மட்டுமே அரசியலை தூய்மைப்படுத்த முடியும்.குற்றவாளிகள் அரசியலுக்குள் நுழைந்து, எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் ஆகி அமைச்சராகவும் பதவி ஏற்பது, மக்களுக்கு தறவான தகவலை கொண்டு சேர்க்கும். குற்றவாளிகள், அரசின் கொள்கை முடிவுகளை எடுப்பவர்களாக இருக்கக்கூடாது. இதனை தடுக்க மத்திய அரசு சட்டம் கொண்டு வர வேண்டும் என தெரிவித்தனர்.