சென்னை:
டையை மீறி மாநிலம் முழுவதும் விநாயகர் சிலை வைக்கப்படும் என்று இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிவித்துள்ளார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, விநாயகர் சதுர்த்தி அன்று பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்கவும், ஊர்வலமாக சென்று நீர்நிலைகளில் கரைக்கவும் தமிழக அரசு தடை விதித்துள்ளது.

வரும் 22ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது:தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி வரும் 22ம் அன்று கொண்டாடப்பட உள்ளது. கொரோனா தொற்று பரவலை தடுக்க பொது விழாவை தவிர்க்கவும் பொது இடங்களில் மக்கள் அதிகமாக கூடுவதைாக தவிர்க்கவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

கொரோனா பரவலை தடுக்கவும், பொது மக்கள் நலன் கருதியும் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை நிறுவுவதோ, அல்லது சிலைகளை வைத்துவிழா கொண்டாடுவதோ, விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து செல்வதோ , அச்சிலைகளை நீர்நிலைளில் கரைப்பதோ , தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகள் உள்ள நிலையில் அனுமதிக்க இயலாது. எனவே, விநாயகர் சதுர்த்தி பண்டிகையை அவரவர் வீடுகளிலேயே கொண்டாட அனுமதிக்கப்படுகிறது.

மேலும், பண்டிகை கொண்டாட தேவையன பொருட்களை வாங்க கடைகளுக்கோ, சந்தைகளுக்கோ செல்பவர்கள் கண்டிப்பாக மாஸ்க் அணிந்திட வேண்டும் . அனைத்து இடங்களிலும் சமூக இடைவெளியை முறையாக கடைபிடிக்க வேண்டும்.

சிறிய கோவில்களில் பொது மக்கள் வழிபட அரசு ஏற்கனவே அனுமதி அளித்துள்ள நிலையில், அத்தகைய, திருக்கோவில்களில் வழிபாடு செய்யும் போது அறிவுறுத்தப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை தவறாமல் கடைபிடிக்குமாறு பொது மக்களும் திருக்கோவில் நிர்வாகமும் கேட்டு கொள்ளப்படுகிறார்கள். மேலும், அவ்வாறு வழிபாட்டு தலங்களுக்கும் பொது இடங்களுக்கும் செல்பவர்கள் கண்டிப்பாக மாஸ்க் அணிந்து உரிய சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், தடையை மீறி மாநிலம் முழுவதும் விநாயகர் சிலை வைக்கப்படும் என்று இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிவித்துள்ளார்.