புதுடெல்லி: நீதித்துறை சார்ந்த பணி நியமனங்களில், நானோ அல்லது மத்திய சட்ட அமைச்சகமோ தபால் அலுவலகமாக செயல்படமாட்டோம் என்றும், உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்கள் ஆகியவற்றுடன் கலந்துரையாடி, நியமனப் பணிகளை துரிதப்படுத்துவோம் என்றும் தெரிவித்துள்ளார் மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்.

நாடெங்கிலும் உள்ள கீழமை நீதிமன்றங்களுக்கான நீதிபதிகளை நியமிப்பதற்கான அகில இந்திய நீதித்துறை சேவையை அமைப்பது குறித்து, சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்துரையாடும் எண்ணத்தில் அரசு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
“சட்ட அமைச்சரும், சட்ட அமைச்சகமும் பங்குதாரர்கள். நாங்கள் கொலீஜியம் அமைப்பை மிகவும் மதிக்கிறோம்.

எனவே, உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களுடன் கலந்தாலோசனை செய்து, நீதித்துறை நியமனங்களை விரைவாக மேற்கொள்ளும் வகையில் செயல்படுவோம்” என அமைச்சக பொறுப்பேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.