சென்னை: தமிழ்க சட்டப்பேரவையில் உரையாற்றிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை, பெண் காவலருக்கே பாதுகாப்பு இல்லை என குற்றம் சாட்டினார். இதற்கு உடனடியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் கூறினார். முதலமைச்சரின் பதிலில் திருப்தி இல்லை என கூறி  அதிமுக எம்எல்ஏக்கள்  வெளிநடப்பு செய்தனர்.

சட்டப்பேரவையின் இன்றைய கூட்டத்தொடரின்போது, ஆளுநர் உரைமீதான விவாத்தில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என குற்றம் சாட்டியதுடன்,  திமுக கூட்டத்தில் பெண் காவலருக்கு பாதுகாப்பு இல்லை என்பதை சுட்டிக்காட்டினார். நாள்தோறும் கொலை, கொள்ளை, வழிப்பறி நடைபெறுகிறது. சென்னை சாலிகிராமத்தில் நடந்த திமுக கூட்டத்தில் பெண்களுக்கே பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டது என்று குற்றம்சாட்டினார்.

இதற்கு உடனடியாக பதில் கூறிய முதலமைச்சர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் பொத்தம் பொதுவாக கூறாமல் ஆதாரத்துடன் பேசுமாறு கூறினார். மேலும் அவர், அதிமுக ஆட்சியில் என்ன நடந்தது என்று நான் கூறுகிறேன், . கடந்த அதிமுக ஆட்சியின் சட்டம் – ஒழுங்கு எப்படி இருந்தது என்பது குறித்த பட்டியல் உள்ளது என்றார்.

மேலும், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய ஸ்டாலின், பெண் காவலரிடம் அத்துமீறிய விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்று கூறியதுடன், அதிமுக ஆட்சியில் நடைபெற்ற பல்வேறு சம்பவங்களை சுட்டிக்காட்டி பேசினார்.

இந்த நிலையில், ஆளுங்கட்சி தரப்பில் அனுமதித்ததால்தான் என்னை பேச அனுமதிப்பீர்களா? என சபாநாயகரிடம் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.  தங்களை திட்டமிட்டு வேண்டுமென்றே திட்டமிட்டு பேச விடாமல் தடுப்பதாக குற்றம்சாட்டினார்.

இதற்கு, சபாநாயகரை குற்றம்சாட்டி பேசுவது கண்டிக்கத்தக்கது. நேரமில்லா நேரத்தில் கேள்வி எழுப்ப சபாநாயகரிடம் முன் அனுமதி பெறப்பட்டதா? நான் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது சபாநாயகர் தனபாலிடம் முன் அனுமதி பெற்றுதான் கேள்வி எழுப்புவேன் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், எதிர்க்கட்சி தலைவரை பேச அனுமதியுங்கள், நான் பதில் சொல்ல தயார், ஓடி ஒளிய மாட்டேன் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, எடப்பாடி தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.