சென்னை: திமுக ஆட்சிப்பொறுப்பேற்றது முதல் தமிழ்நாடிடடில் சட்டம்-ஒழுங்கு முற்றிலுமாக சீரழிந்துள்ளது  என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்  சீமான் விமர்சித்துள்ளார்.  ஊராட்சிமன்றச் செயலாளர் தங்கபாண்டியனை உடனடியாக கைது செய்து, சட்டப்படி கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டுமென தமிழ்நாடு அரசினை கேட்டுக்கொள்கிறேன் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாட்டில், கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை உள்ளிட்டுக் கொடுங்குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது திமுக அரசின் நிர்வாகத் தோல்வியையே காட்டுகிறது என்றும்,  என்றும் 18 வயது நிரம்பாத இளம் பிள்ளைகள் அதிக அளவில் கொலை செய்யப்படுவதும், கொலை செய்யும் அளவிற்குக் கொடூர குணமுடையவர்களாக ஆகிவிட்டதும் சமூகமே குற்றச்சமூகமாக மாறி நிற்பதையே காட்டுகிறது என குற்றம் சாட்டி உள்ளார்.

இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருநெல்வேலி அருகே உள்ள திருப்பணிகரிசல் குளம் கிராமத்தைச் சேர்ந்த அன்புமகள் சந்தியா, திருநெல்வேலி மாநகரில் உள்ள அழகு நிலைய பொருள் விற்பனைக் கடையில் பணியாற்றி வந்த நிலையில், ஒரு தலைகாதல் காரணமாக அதே பகுதியில் பணிபுரிந்து வந்த இளைஞரால் படுகொலை செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியையும், மிகுந்த மனவேதனையையும் அளிக்கிறது.

தமிழ்நாட்டில் அண்மைக்காலமாக இளம்பெண்கள் பட்டப்பகலில் படுகொலை செய்யப்படுவது அதிகரித்துவருவது தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு முற்றாகச் சீரழிந்துள்ளது என்பதையே வெளிப்படுத்துகிறது.

18 வயது நிரம்பாத இளம் பிள்ளைகள் அதிக அளவில் கொலை செய்யப்படுவதும், கொலை செய்யும் அளவிற்குக் கொடூர குணமுடையவர்களாக ஆகிவிட்டதும் சமூகமே குற்றச்சமூகமாக மாறி நிற்பதையே காட்டுகிறது. தமிழ்நாட்டில் 60 ஆண்டுகாலம் தொடர்ச்சியாக ஆண்டுவரும் இரு திராவிடக் கட்சிகளின் நெறிதவறிய ஆட்சியால் மது, கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் விற்பனை சந்தையாக தமிழ் நிலத்தை மாற்றி நிறுத்தியுள்ளதன் விளைவே தற்போது இளைய தமிழ்ச்சமூகம் சீரழிந்துள்ளதற்கான முக்கியக் காரணமாகும்.

மதுபானத்தை அரசே விற்கும் திராவிடக் கட்சிகளின் கொள்கை நிலைப்பாடே தமிழ்நாட்டில் நடக்கின்ற அனைத்துச் சமூகக் குற்றங்களுக்கும் அடிப்படையாகும். குறிப்பாக, திமுக ஆட்சிப்பொறுப்பேற்றது முதல் தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு என்பதே முற்றாகச் சீரழிந்துள்ளது.

கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை உள்ளிட்டுக் கொடுங்குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது திமுக அரசின் நிர்வாகத் தோல்வியையே காட்டுகிறது. காவல்துறையைத் தனது நேரடி கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதலமைச்சர் ஐயா ஸ்டாலின் அவர்களே தற்போதைய சட்டம்-ஒழுங்கு சீரழிவிற்கான முழுபொறுப்பையும் ஏற்று, அதனைச் சீர்செய்வதற்கான முயற்சியை இனியாவது துரிதமாக முன்னெடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

ஆகவே, அன்புமகள் சந்தியாவைக் கொடூரமாகக் கொலை செய்த குற்றவாளியை கைது செய்து சட்டத்தின்முன் நிறுத்தி, உரிய தண்டனைப் பெற்றுத்தர வேண்டுமெனவும், சந்தியாவின் குடும்பத்தினருக்கு துயர் துடைப்பு நிதியாக ஒரு கோடி ரூபாயும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

அதுபோல சீமான் வெளியிட்டுள்ள மற்றொரு அறிவிப்பில், ஊராட்சிமன்றச் செயலாளர் தங்கபாண்டியனை உடனடியாக கைது செய்து, சட்டப்படி கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டுமென தமிழ்நாடு அரசினை கேட்டுக்கொள்கிறேன் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக  அவர்,  வெளியிட்டுள்ள அறிக்கையில், “விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிப்புத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கங்காகுளம் கிராமத்தில் அக்.,2 அன்று நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில், வேப்பங்குளம் விவசாயி அம்மையப்பர் அவர்களை ஊராட்சிமன்றச் செயலாளர் தங்கபாண்டியன் காலால் எட்டி உதைத்த நிகழ்வு பெரும் அதிர்ச்சியளிக்கிறது. திருவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மான்ராஜ் முன்னிலையிலேயே நடைபெற்றுள்ள இக்கொடூரத் தாக்குதல் மக்களாட்சி நடைமுறையையே கேலிக் கூத்தாக்கியுள்ளது.

இத்தாக்குதலில் ஈடுபட்ட ஊராட்சிமன்றச் செயலாளர் தங்கபாண்டியன் கடந்த 25 ஆண்டுகளாக ஒரே ஊராட்சியில் பணியாற்றி வருவதுடன், பல்வேறு ஊழல் முறைகேடுகளிலும் ஈடுபட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தொடர்ந்து புகார் கூறி வரும் நிலையில் அவர் மீது எவ்வித நடவடிக்கையும் திமுக அரசு இதுவரை எடுக்காதது ஏன்? .கேள்வி கேட்பதற்காகத்தானே கிராமசபைக் கூட்டங்கள் நடத்தப்படுகிறது? கேள்வி கேட்டவரைத் தாக்குவதென்பது என்ன மாதிரியான சனநாயக நடைமுறை?

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மக்கள் கேட்கும் கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல் கிராமசபைக் கூட்டங்கள் பலமுறை ஒத்திவைக்கப்படுவதும், கேள்வி கேட்பவர்கள் மீது கடுமையாகத் தாக்குதல் தொடுப்பதும் தொடர் கதையாகிவிட்டது. சாதாரண ஊராட்சிமன்றச் செயலாளர் முதல் பெண் கவுன்சிலர்களின் கணவர்கள் வரை தங்களின் அதிகார கொடுங்கரங்களால் அப்பாவி பொதுமக்களை அச்சுறுத்தி, மிரட்டி கொலைவெறித் தாக்குதல் நடத்துகிறார்கள் என்றால் திமுக ஆட்சியில் எந்த அளவிற்கு அதிகார அத்துமீறல்கள் உச்சத்தில் உள்ளது என்பதற்கு இந்நிகழ்வுகளே தக்கச்சான்றாகும். இதுதான் எல்லார்க்கும் எல்லாம் கிடைக்கச் செய்வதற்கான திமுகவின் திராவிட மாடலா? விவசாயி அம்மையப்பரை தாக்கிய குற்றவாளி தங்கபாண்டியனை இதுவரை கைது செய்யாதது ஏன்? அல்லது வேங்கை வயல் குற்றவாளிகளைப் போல இதிலும் கடைசிவரை கைது செய்யாமலே மக்களை ஏமாற்றப் போகிறீர்களா? செய்த குற்றங்களுக்கு தற்காலிக பணியிடை நீக்கம் செய்வது மட்டுமே தீர்வாகிவிடுமா?

ஆகவே, இனியும் தாமதிக்காமல் விவசாயி அம்மையப்பர் அவர்களை அவமதித்து, கடுமையாக தாக்கிய ஊராட்சிமன்றச் செயலாளர் தங்கபாண்டியனை உடனடியாக கைது செய்து, சட்டப்படி கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டுமென தமிழ்நாடு அரசினை கேட்டுக்கொள்கிறேன். மேலும், தாக்குதலில் காயமுற்று சிகிச்சை பெற்று வரும் விவசாயி அம்மையப்பருக்கு உரிய சிகிச்சையும், இழப்பீடும் வழங்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார் .