திருநெல்வேலி
ரெயில் பெட்டியில் கழிப்பறை சுத்தம் செய்ய வேண்டும் என பயணி ஒருவர் அமைச்சருக்கு டிவிட்டரில் புகார் அளித்த பின் சுத்தம் செய்யப்பட்டுள்ளது.
தினமும் நாகர்கோவிலில் இருந்து பெங்களூருவுக்கு ஒரு விரைவு ரெயில் இயக்கப்படுகிறது. தினமும் 7.15 மணிக்கு கிளம்பும் இந்த ரெயில் திருநெல்வேலி, சேலம், தர்மபுரி வழியாக பெங்களூரு செல்கிறது. நேற்று இந்த ரெயிலின் எஸ்3 பெட்டியில் கேரளாவைச் சேர்ந்த சிலர் பயணம் செய்தனர்.
அந்தப் பெட்டியில் உள்ள கழிப்பறை சுத்தம் செய்யப்படாமல் துர்நாற்றம் வீசியது. யாரும் கழிப்பறை பக்கம் கூட செல்ல இயலாத நிலையில் இருந்தது. இது குறித்து பயணிகள் புகார் அளித்தும் பயன் இல்லாமல் இருந்தது. இந்த கழிப்பறையை புகைப்படம் எடுத்த கேரள பயணிகளில் ஒருவர் ரெயில்வே அமைச்சர் பியூஷ் கோயலில் டிவிட்டர் பக்கத்தில் புகாருடன் படத்தை பதிந்தார்.
இரவு சுமார் 9 மணிக்கு அந்த ரெயில் திருநெல்வேலி ரெயில் நிலையத்தை அடைந்தவுடன் தயாராக காத்திருந்த துப்புறவு பணியாளர்கள் உடனடியாக கழிப்பறைய சுத்தம் செய்தனர். புகார் செய்தவருக்கு “உங்கள் புகார் தீர்வு செய்யப்பட்டுள்ளது” என டிவிட்டரில் பதில் வந்தது.
அமைச்சரிடம் புகார் அளித்தால் தான் ரெயில்வே நிர்வாகம் கழிப்பறையை சுத்தம் செய்கிறது என பயணிகள் தங்கள் ஆதங்கத்தை தெரிவித்துள்ளனர்.