சரியாகச் சொல்லப்போனால், இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் 79 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த அதே 1942 ஆம் ஆண்டில்தான் பின்னணி பாட வந்தார், 13 வயதான லதா மங்கேஷ்கர்.

தந்தை தீனாநாத் மிகப் பெரிய இசைக் கலைஞர் மற்றும் நடிகர். அதனால் லதா மங்கேஷ்கருக்கு ரத்தத்திலேயே இசை என்பது ஊறிப்போய் இருந்தது. இதற்கு இன்னொரு சாட்சி, உடன்பிறந்த தங்கையான பின்னணி பாடகி ஆஷா போஸ்லே.

1940-களின் துவக்கத்தில் பாடவந்த லதாவுக்கு, சினிமாவுக்கு பொருந்தாத அளவுக்கு குரல் மிகவும் மெல்லியதாக இருக்கிறது என்று கூறியே பல இசையமைப்பாளர்கள் வாய்ப்பு தர முன்வரவில்லை.

சில ஆண்டுகள் போராடிய லதாவுக்கு, 1948 ல் வெளியான மஜ்பூர் திரைப்படம் தான் ஒரு பிரேக்கை தந்தது.

அந்தப் படத்தில் பாட வாய்ப்பு தந்த இசையமைப்பாளர் குலாம் ஹைதர்தான் தனது காட்பாதர் என, லதா பல பேட்டிகளில் சொல்லியிருக்கிறார்.

இந்திய திரை உலகில் ஏராளமான மொழிகளில், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்கள்.. கின்னஸ் சாதனை என பின்னாளில் சாதனை மேல் சாதனை படைத்த லதா மங்கேஷ்கருக்கு, ஆரம்பத்தில் மிகப்பெரிய வெற்றிகரமான ஆண்டு என்றால் அது 1952-ஐத்தான் சொல்ல வேண்டும்.

மீனாகுமாரி நடித்த பைஜுபாவ்ரா என்ற படம், திலீப் குமார் நடித்த Aan திரைப்படம். இரண்டு படங்களுமே பாடல்களுக்காக சக்கை போடு போட்டன.

அதிலும் ஆன் திரைப்படத்தைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால் லதா மங்கேஷ்கருக்கு தமிழில் முதன்முறையாக தொடர்பு ஏற்படுத்திக் கொடுத்த படம் எனலாம்.

ஆன் படம் தமிழில் டப் செய்த போது இசையமைப்பாளர் நவ்ஷாத் இசையில் லதா மங்கேஷ்கரே தமிழிலும் பாடினார்.

கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்கு பிறகு லதாவை மீண்டும் தமிழில் பாட வைத்தது இளையராஜாதான்.

பிரபு நடித்த ஆனந்த் படத்தில் ஆராரோ ஆராரிரோ என்ற பாடலையும் அதன்பின்னர் கமலின் சத்யா படத்தில் வளையோசை கலகலவென என்ற பாடலையும் பாடவைத்தார் இசைஞானி.

போகட்டும் மறுபடியும் இந்தி திரையுலகிற்கு போவோம். 1952 க்குப் பிறகு லதா மங்கேஷ்கருக்கு பின்னணிப் பாடல் உலகில் ஜெட் வேகம் தான்.

ராஜ்கபூர் படங்களுக்கு இசையமைத்த சங்கர் ஜெய்கிஷன் ஜோடி லதாவின் குரலை எல்லா படங்களிலும் அள்ளித் தெளித்தது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை ஒரு நேர்காணலில் நடிகை சிமி கர்வால்” உங்களுக்கு மிகவும் பிடித்த பாடல் எது? அதை நான்கு வரி பாடமுடியுமா? என்று கேட்டார்.

ஜெயலலிதா உடனே பாடியது, லதா மங்கேஷ்கர் சோரி சோரி படத்தில் ஆஜா சனம் மதுர சாந்தினி… என்ற பாடலைத்தான். சோரி சோரி (1956) படம் ஏவிஎம் தயாரித்து ராஜ்கபூர் நடித்தது.

1964 ல் Woh kaun thi? என்ற இந்தி திரைப்படம். லக் ஜா கலே… மற்றும் நைய்னா பர்ஸே ரிம் ஜிம்.. என லதா மங்கேஷ்கர் பாடிய இரண்டு பாடல்கள்.

அந்தப் படம் தமிழில் ஜெயலலிதா நடித்து யார் நீ என ரீமேக் செய்யப்பட்டது அதே இரண்டு பாடல்களை தமிழில் பி. சுசீலா பாடினார்.

 

“பொன்மேனி தழுவாமல்….”மற்றும் “நானே வருவேன் அங்கும் இங்கும்”. இரண்டு பாடல்களுமே மெகா ஹிட்.

லதா மங்கேஷ்கரை பொறுத்தவரை 1950கள் தொடங்கி கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகள் நம்பர் ஒன் பாடகியாக கொடிகட்டி பறந்தார்.

நவ்ஷத், சலீல் சவுத்ரி, சங்கர்-ஜெய்கிஷன், எஸ் டி பர்மன், ரவி வசந்த் தேசாய் ஆர் டி பர்மன் கல்யாண்ஜி- ஆனந்த்ஜி.. என டாப் மியூசிக் டைரக்டர்கள் அத்தனைபேரும் ஹீரோயினுக்கு பின்னணி என்றால் உடனே நாடியது லதா மங்கேஷ்கரைத் தான்

ஹிந்தி திரைப்படம் என்றாலே ஒன்று லதா மங்கேஷ்கர் பாடல் இருக்கும். அவர் பாட முடியாத போது அந்த இடத்தை அவரது தங்கை ஆஷா போன்ஸ்லே நிரப்புவார்.

இந்தியாவில் உள்ள எந்த மொழி இசையமைப்பாளராக இருந்தாலும் சரி தங்களுடைய படத்தில் ஒரு பாடலையாவது லதா மங்கேஷ்கரை பாட வைத்துவிடவேண்டும் என்று ஏங்காத இசையமைப்பாளர்களே கிடையாது.

அந்த அளவுக்கு பின்னணி பாடல் உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்தவர் லதா மங்கேஷ்கர்.

கமலின் ஏக் துஜே கேலியே, சல்மான்கானின் ஹம் ஆப்கே ஹைன் கோன் ஆகிய இரு படங்களிலும் எஸ் பி பாலசுப்ரமணியத்துடன் இணைந்து லதா பாடிய பாடல்கள் அந்த அந்த ஆண்டில் இளைஞர்கள் மத்தியில் தேசிய கீதமே.

ஷாருக்கானின் தில்வாலே துல்ஹனியா லே ஜாயங்கே படத்தில் வரும், துஜே தேகா தோயி ஜானா சனம் போன்ற பாடல்கள் எல்லாம் காலம்காலமாய் லதாவின் பெயரை தலைமுறைகள் தலைமுறைகள் தாண்டியும் பறைசாற்றிக் கொண்டிருக்கும்.

சினிமா ரசிகர்கள் மட்டுமல்ல, பெரிய பெரிய ஜாம்பவான்கள் மனதிலெல்லாம் பாசத்துடன் குடிகொண்டிருந்தவர் லதா மங்கேஷ்கர்.

நடிகர் திலகம் சிவாஜிக்கும் லதா மங்கேஷ்கர்க்கும் இடையிலான அண்ணன் தங்கை உறவு திரையுலகில் மிகப்பிரசித்தமானது.

மும்பைக்கு குடும்பத்துடன் சிவாஜி சென்றால் தங்குவது, லதா வீட்டில்தான். அதேபோலத்தான் சென்னைக்கு வந்தால் லதா தங்குவதும் சிவாஜியின் அன்னை இல்லத்தில்தான். விருந்து அவ்வளவு தடபுடலாக நடக்கும்.

திரையுலகினரை போலவே மாபெரும் அரசியல் தலைவர்களும் லதா மீது அவ்வளவு மரியாதை வைத்திருந்தார்கள். அதனால்தான் ராஜ்யசபா எம்பி பதவி கூட லதாவை தேடிவந்தது ..

திருமண பந்தத்திற்குள் செல்லாத லதா மங்கேஷ்கர் நூற்றுக்கணக்கான கதாநாயகி களுக்காக பின்னணி பாடிய பெருமை கொண்டவர். லதாவுக்கு இந்தியாவில் எத்தனை விருதுகள் உண்டோ அத்தனையும் கிடைத்தன என்றே சொல்லலாம்.

திரை உலகின் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே, நாட்டுக்கு மிக உயர்ந்த விருதான, பாரத ரத்னா ஆகியவை கூட லதாவின் மணிமகுடத்தில் சேரத்தவறவே இல்லை.

உடல் நலம் சரியில்லாததால் கடந்த சில ஆண்டுகளாக பாடுவதை நிறுத்தி இருந்த லதா மங்கேஷ்கர், ஜனவரி மாதம் எட்டாம் தேதி மருத்துவ பரிசோதனை நடந்தபோது கோவிட்-19 இருப்பது தெரியவந்தது.

அதன் பிறகு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு போராடி வந்த லதா மங்கேஷ்கர் பிப்ரவரி 6 ஆம் தேதியை தனது இறுதி நாளாக அமைத்துக் கொண்டிருக்கிறார்.

இந்திய சினிமா உலகிற்கு மட்டுமல்ல இந்தியத் திரை உலகிற்கே லதா மங்கேஷ்கர் இழப்பு, உண்மையிலேயே ஈடு செய்ய முடியாத இழப்பு.

இன்னொரு வகையில் பார்த்தால் லதா மங்கேஷ்கர் போன்றவர்களுக்கு மறைவு என்பதே கிடையாது. ஒவ்வொரு நாளும் வானொலி டிவி என பல்லாயிரம் இடங்களில் லதாவின் குரல் ஒலித்துக் கொண்டேதான் இருக்கும்.

– ஏழுமலை வெங்கடேசன்.