சென்னை:
கடந்த ஆண்டு இதே நாளில் சசிகலாவிடம் அதிமுகவின் பொதுச் செயலாளராக பதவி ஏற்குமாறு நிர்வாகிகள் கெஞ்சி உள்ளனர்.
சுமார் 33 ஆண்டுகளாக ஜெயலலிதாவுடன் நிழல் போல் இருந்தவர் சசிகலா. வேட்பாளர் நியமனத்தில் தொடங்கி, டெண்டர் முடிவு செய்தல், நிர்வாகிகள் நியமனம் என அனைத்திலும் சசிகலா மற்றும் அவர் குடும்பத்தினரின் ஆலோசனைப் படியே ஜெயலலிதா செயல்பட்டு வந்ததாக சொல்லப்படுகிறது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உடல் நிலை பாதிப்பு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா 75 நாள்கள் சிகிச்சை பலனின்றி டிசம்பர் 5-ஆம் தேதி மரணமடைந்தார். அதை தொடர்ந்து டிசம்பர் 5-ஆம் தேதி இரவு அவசர அவசரமாக ஓபிஎஸ் மற்றும் அமைச்சரவை சகாக்கள் ஆளுநர் மாளிகைக்கு சென்று அங்கு முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருடன் அமைச்சர்களும் பதவி பிரமாணம் செய்து கொண்டனர்.
பதவி ஏற்பை அப்போது தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவ் நடத்தி வைத்தார். ஆட்சியை நடத்த ஓ பி எஸ் போல கட்சியை வழிநடத்துவது யார் என்ற கேள்வி எழுந்தது. அதிமுக வின் மூத்த நிர்வாகிகள் ஒன்று கூடி ஆலோசனை செய்தனர். ஆலோசனை முடிவில் ஜெயலலிதா வசித்த போயஸ் தோட்டத்துக்கு சென்றனர்.
அந்த வீட்டில் சோகக் கோலத்தில் இருந்த சசிகலாவை சந்தித்து இனி நீங்கள்தான் கட்சியை வழிநடத்த வேண்டும் என்று கெஞ்சி கேட்டுக் கொண்டனர். சசிகலாவோ துக்கம் தோய்ந்த குரலில் ”அக்காவே போய்விட்டார்கள். இனி எனக்கு பதவி எல்லாம் எதற்கு?” என்று கேட்டுள்ளார்.
மதுசூதனன், பொன்னையன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் கெஞ்சி கூத்தாடியும் சசிகலா மனம் இறங்காததால் அவரது காலில் விழுந்து கெஞ்சினர். அவர்களின் வேண்டுகோளுக்கு அரைமனதாக சம்மதம் தெரிவித்தார் சசிகலா. கடந்த ஆண்டு டிசம்பர் 14-ஆம் தேதி இந்த சம்பவங்கள் நடந்தது..
ஜெயலலிதா தான் அதிமுக வின் நிரந்தர பொதுச்செயலாளர் எனக் கூ/றிய அதிமுக நிர்வாகிகள் அந்தப் பொறுப்பை ஏற்குமாறு சசிகலா காலில் விழுந்து இன்றோடு ஓராண்டு முடிவடைய போகிறது.