டில்லி

நேற்று மரணமடைந்த மூத்த பத்திரிகையாளர் வினோத் துவாவின் இறுதி சடங்குகள் இன்று டில்லியில் நடைபெறுகிறது.

தனியார் தொலைக்காட்சி ஊடகமான என் டி டி வியில் தொடக்கக் காலத்தில் செய்தி ஆசிரியராக வினோத் துவா பணியாற்றி வந்துள்ளார்.    இவரது வினோத் துவா லைவ் மற்றும் ஜைக்கா இந்தியா நிகழ்ச்சிகள் பிரபலமானவை ஆகும்.   அவர் ஏற்கனவே தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் நடத்தி வந்த ஜனவாணி, தேர்தல் கணிப்புக்கள் ஆகியவையும் புகழ் பெற்றவை ஆகும்.

இவர் பத்மஸ்ரீ, ராம்நாத் கோயங்கா விருதுகள் பெற்றவர் ஆவார்.  இவருக்கு மல்லிகா துவா மற்றும் பக்குல் துவா என இரு மகள்கள் உள்ளனர்.   மல்லிகா நகைச்சுவை நடிகை மற்றும் பக்குல் மனநல மருத்துவராகப் பணி புரிகின்றனர்.  வினோத் துவாவின் மனைவி பத்மாவதி கடந்த ஜூன் மாதம் கொரோனா தொற்றால் உயிர் இழந்தார்.  இதில் இருந்தே வினோத் துவா உடல் நலம் கெடத் தொடங்கியது.

அவரது உடல்நிலை மிகவும் சீர் கெட்டதால் டில்லி அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சை பெற்று வந்த வினோத் துவா நேற்று மாலை 4.30 மணிக்கு உயிர் இழந்தார்.  அவரது இறுதிச் சடங்குகள் டில்லி லோதி எஸ்டேட் மயானத்தில் இன்று நடைபெறுகிறது.  வினோத் துவா மறைவுக்குப் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.