டில்லி

னவரி மாத ஜி எஸ் டி வசூல் ரூ.1,38,397 கோடி என மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.

 

ஜிஎஸ்டி கடந்த 2017 ஜூலை 1ம் தேதி அமலுக்கு வந்தது. அதன் பிறகு, அதிகபட்சமாக கடந்த ஆண்டு ஏப்ரலில் ரூ.1.39 லட்சம் கோடி வசூலானது. தற்போது 2வது அதிகபட்சமாக 1.38 லட்சம் கோடி வசூலாகி உள்ளது.  நேற்று மத்திய நிதி அமைச்சகம் ஜனவரி மாதத்துக்கான ஜி எஸ் டி வசூல் விவரங்களை வெளியிட்டுள்ளது.

அதில், “இந்த வருடம் ஜனவரி மாதத்தில் மொத்தம் ரூ.1 லட்சத்து 38 ஆயிரத்து 394 கோடி ஜிஎஸ்டி வசூல் ஆகியுள்ளது. இதில் மத்திய ஜிஎஸ்டி ரூ.24,674 கோடியாகவும், மாநில ஜிஎஸ்டி ரூ.32,016 கோடியாகவும், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ.72,030 கோடியாகவும் உள்ளது.   இதில் செஸ் வரி ரூ.9,674 கோடி வசூலாகியுள்ளது’” எனக் கூறப்பட்டுள்ளது.

கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தை விடக் கடந்த மாத ஜிஎஸ்டி வசூல் 15 சதவீதம் அதிகரித்துள்ளது.   சென்ற வருடம் டிசம்பரில் 1.29 லட்சம் கோடி வசூலானது. ஒரே மாதத்தில் அது 1.38 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. தற்போது 4வது முறையாக ஜிஎஸ்டி வசூல் ரூ.1.30 லட்சம் கோடியைத் தாண்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.