சென்னை: தமிழகத்தில் கடந்த 6 நாளில் 42,947 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியா முழுவதும் 9,99,065 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கடந்த 16ந்தேதி கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. அன்றுமுதல் நேற்று வரை (21ந்தேதி) கடந்த 6 நாட்களில் நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,99,065 ஐ எட்டியுள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் வியாழக்கிழமை மாலை தெரிவித்துள்ளது.
நேற்று மட்டும் (வியழாக்கிழமை) 27 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 1,92,581 பயனாளிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டதாகவும், இறுதி அறிக்கையைச் சேர்த்து இரவு தாமதமாக முடிக்கப்படும் என்றும் அது கூறியுள்ளது.
தமிழகத்தில் நேற்று 166 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடந்தது. இதில் 16 ஆயிரத்து 600 சுகாதாரப்பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்த தடுப்பு மருந்து தயாராக வைக்கப்பட்டிருந்தது. இதுவரை 42,947 முன்கள சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.
இவர்களில், 42 ஆயிரத்து 40 பேருக்கு ‘கோவிஷீல்டு‘ தடுப்பூசியும், 907 பேருக்கு ‘கோவேக்சின்‘ தடுப்பூசி என மொத்தம் 42,947 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 600க்கும் மேற்பட்டோருக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளது. சிலர் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். தடுப்பூசி காரணமாக இதுவரை யாரும் இறந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
ஆனால், 4 பேர் உயிரிழந்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.