புதுடெல்லி: கால்பந்திற்கு எப்படி ஒரு கிறிஸ்டியானோ ரொனால்டோவோ, அதுபோல் கிரிக்கெட்டிற்கு விராத் கோலி என்று புகழ்ந்துள்ளார் கிரிக்கெட்டின் ஓய்வுபெற்ற ஜாம்பவான்களில் ஒருவரான பிரையன் லாரா.

தற்போது இந்தியாவின் 3 வித கிரிக்கெட் போட்டிகளுக்கும் கேப்டனாக இருந்து ரன்கள் விஷயத்தில் பல சாதனைகளைப் படைத்துக்கொண்டு செல்லும் கோலியை, பிராட்மேன் மற்றும் கிளைவ் லாயிட்ஸ் ஆகியோருடனும் ஒப்பிட்டுள்ளார் லாரா.

“கோலி முழுமையான அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்படுகிறார். அவர் போட்டிக்குத் தயாராகும் விதம் என்னை வியக்க வைக்கிறது. இவரின் உடற்தகுதி மற்றும் மனவலிமையை என்னால் நம்பவே முடியவில்லை.

கிரிக்கெட்டின் எந்த காலத்திலும் விராத் கோலியின் பெயரை எழுதாமல் தவிர்த்துவிட முடியாது. அனைத்துவகை கிரிக்கெட்டிலும் இவர் 50 ரன்களுக்கு மேல் சராசரியை வைத்துள்ளார். இப்படியான ஒரு வீரரைப் பற்றி கேள்விப்படுவது சாதாரண விஷயம் கிடையாது.

கால்பந்திற்கு எப்படி ஒரு கிறிஸ்டியானோ ரொனால்டோவோ, அப்படித்தான் கிரிக்கெட்டிற்கு கோலி” என்று புகழ்ந்துள்ளார் லாரா.