சென்னை: தமிழகம் முழுவதும் மீண்டும் பத்திரப்பதிவு மோசடி அரங்கேறி உள்ளது தெரிய வந்துள்ளது. கோவை மண்டலத்தில் மட்டும் ரூ.100 கோடிக்கு மேல் வருவாய் மோசடி நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக விசாரிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
தமிழகம் முழுவதும்  578 சார்பதிவாளர் அலுவலகங்கள்  உள்ளது. இதன்மூலமே   வீடு, விளை நிலம் உள்ளிட்ட சொத்து பரிமாற்றங்கள் பதிவு செய்யப்படுகிறது. இதில், பாக பிரிவினை, தான பத்திரம், செட்டில் மென்ட், உயில் பத்திரம், கிரயபத்திரம், விற்பனை பத்திரம்  உள்ளிட்ட பத்திரங்கள் சொத்துக்களின் உரிமை மாற்றத்தை குறிப்பிடும் ஆவணங்களாக உள்ளது.
இத்தகயை பத்திரங்களை பதிவு செய்யப்படும் போது சில நேரங்களில் பல்வேறு குளறுபடிகள் ஏற்படுகிறது.  போலி ரசிதுகள் மூலம் பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டு, அரசின் வருவாயை குறைத்து கையூட்டு பெறப்பட்டு வருகிறது.  அதுபோல,  சார்பதிவாளர்கள் சிலர் சமூக விரோதிகள் உடன் போலி ஆவணங்கள் தயார் செய்து பத்திரம் பதிவு, புறம்போக்கு நிலங்கள் பத்திரப்பதிவு, ஒரு நபருக்கு தெரியாமல் பத்திரங்களை ரத்து செய்வது உள்ளிட்ட பல்வேறு புகார்கள் எழுகிறது.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட நபர்கள் சார்பதிவாளர், மாவட்ட பதிவாளர், பதிவுத்துறை ஐஜி மீது வழக்கு தொடருகின்றனர். இது போன்று ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. இருந்தாலும், இதுபோன்ற மோசடிகளை தடுக்க மாநிலஅரசு தீவிரம் கவனம் செலுத்துவதை தவிர்த்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம், அரசியல்வாதிகள், ஆளுங்கட்சியின் என்ற குற்றச்சாட்டுக்களும் உள்ளது.
இந்த நிலையில் தற்போது மீண்டும், பத்திரப்பதிவு மோசடிகள் அரங்கேறி உள்ளது தெரிய வந்துள்ளது. பல மாவட்டங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில் ஏராளமான பணம் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன.  கோவை மாவட்டத்தில் மட்டும் இதுவரை இல்லாத அளவுக்கு  பத்திரப்பதிவுகள் நடைபெற்று உள்ளதாகவும், இதன் காரணமாக, ரூ.100 கோடிக்கு மேல் தமிழகஅரசின் வருவாய் மோசடி செய்யப்பட்டு உள்ளதும் தெரிய வந்துள்ளது.
 கொரோனா பொதுமுடக்கம் காலக்கட்டத்தில், அரசின் வருவாயை நோக்கமாக கொண்டு, பத்திரப்பதிவு அலுவலகங்கள் இயங்க தமிழகஅரசு அனுமதி வழங்கிய நிலையில், கோவை மாவட்டத்தில் ஏராளமான பத்திரப்பதிவுகள் போலி ரசிதுகள் மூலம் நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு பின்னணியில் மணியான அமைச்சர் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் தேர்தல் சமயத்தில் பூதாகாரமாக்க முயற்சிகள் செய்து வருகிறார்கள். இந்த நிலையில்,  கோவை பத்திரப் பதிவுத் துறையில் போலி ரசீது மூலம் கோவை மண்டலத்தில் நடைபெற்றுள்ள மோசடி குறித்து விசாரிக்க கூடுதல் ஐஜி தலைமையில் கமிட்டி அமைத்து பத்திரப்பதிவு துறை ஐஜி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.