ஜொகன்னஸ்பர்க்: முன்னாள் தென்னாப்பிரிக்க ஆல்ரவுண்டர் லேன்ஸ் க்ளூஸ்னர், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போது 48 வயதாகும் இவர், மொத்தம் 49 டெஸ்ட் போட்டிகளும், 171 ஒருநாள் போட்டிகளும் ஆடியுள்ளார்.

ஆப்கன் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்த மேற்கிந்திய தீவுகளின் ஃபில் சிம்மன்ஸ் பதவிகாலம் கடந்த உலகக்கோப்பை போட்டியுடன் நிறைவடைந்தது. இதனையடுத்து புதிய தலைமை பயிற்சியாளர் பதவிக்கு 50க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்தன.

சமீபத்தில் இந்திய அணிக்கு எதிராக நடந்த டி-20 தொடரின்போது, தென்னாப்பிரிக்க அணியின் உதவி பேட்டிங் பயிற்சியாளராக இருந்தார். வரும் நவம்பர் மாதம் மேற்கிந்திய தீவுகளுடன் ஆப்கன் மோதவுள்ள தொடரின்போது, ஆப்கன் அணியின் தலைமைப் பயிற்சியாளராக பொறுப்பேற்பார்.

“உலக கிரிக்கெட்டில் சிறந்த ஆற்றல்களைக் கொண்ட ஒரு குழுவுடன் நான் பணிபுரியவுள்ளதை நினைத்து உண்மையிலேயே மகிழ்ச்சியும், இந்த வாய்ப்புக்காக பெருமையும் அடைகிறேன். ஆப்கானிஸ்தானின் அச்சமற்ற ஆட்டம் குறித்து ஒவ்வொருவரும் அறிவார்கள்” என்றார் க்ளூஸ்னர்.

“சில கடுமையான முயற்சிகளை மேற்கொண்டால் உலகின் சிறந்த ஒரு அணியாக உருவாக முடியும் என்பதில் எனக்கு திடமான நம்பிக்கை உண்டு. ஆப்கன் அணியின் ஆட்டத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்வதில் நான் சிறந்த முறையில் பங்களிப்பேன்” என்று மேலும் கூறினார்.