ராஞ்சி

ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ்  உடல்நிலை காரணமாக 6 வார ஜாமீனில் வெளி வந்துள்ளார்.

பீகாரின் முன்னாள் முதல்வரும் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் தனது ஆட்சிக்காலத்தின் போது ஊழல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.  கடந்த 1991 ல் அவர் மாட்டுத் தீவனத்தில் ஊழல் செய்ததாக 5 வழக்குகளை சிபிஐ பதிவு செய்தது.  இந்த 5 வழக்குகளில் மூன்று வழக்கில் சிறை தண்டனை அளிக்கப்பட்டு அவர்  ராஞ்சியில் உள்ள முண்டா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்.

லாலுவுக்கு சர்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்தம் சிறையில் அதிகரித்தது.  மேலும் சிறுநீரகப் பிரச்சினையாலும் அவர் பாதிப்படைந்தார்.  அதை ஒட்டி அவருக்கு டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை தரப்பட்டது.   அங்கு உடல் தேறிய அவரை மீண்டும் சிறையில் அடைத்தனர்.

அதன் பிறகு லாலு பிரசாத் யாதவின் மூத்த மான் தேஜ் பிரதாப் திருமணம் கடந்த 12ஆம் தேதி நடைபெற்றது.  பாட்னாவில் நடந்த இந்த திருமணத்தில் கலந்துக் கொள்ள லாலுவுக்கு மூன்று நாள் பரோல் வழங்கப்பட்டது.   பரோலில் வந்த லாலு இந்த திருமணத்தில் கலந்துக் கொண்டு சிரை திரும்பினார்.

ஏற்கனவே உடல்நிலை காரணமாக அவர் ஜாமீன் கோரி ஜார்க்கண்ட் மாநில உயர்நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார்.  அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் லாலுவுக்கு 6 வார ஜாமீன் அளித்தது.   நேற்று இதற்கான நடைமுறைகள் முடிவடைந்ததை ஒட்டி லாலு ராஞ்சியில் இருந்து கிளம்பி பாட்னாவுக்கு சென்றுள்ளார்.