பீஹாரில்- லாலு மகன்களின் தனி ஆவர்த்தனம் ….

ரியானாவில்  முன்னாள் துணை பிரதமர் தேவிலால் குடும்பமும், உ.பி.யில் முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவ் குடும்பமும்-அரசியல் ரீதியாக உடைந்து-தனி தனியாக கட்சி நடத்தி வருவது தெரிந்த விஷயம்.

பீஹாரிலும் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் குடும்பம் அதே பாதையில் செல்ல கூடும் என்று  அரசியல் நோக்கர்கள் சந்தேகம் எழுப்புகிறார்கள்.

மாட்டுத்தீவன  ஊழல் வழக்கில் தண்டனை பெற்று லாலு இப்போது ராஞ்சி சிறையில் அடைபட்டு கிடக்கிறார்.

லாலு மகன்கள் பிரதாப் – தேஜஸ்வி

அவருக்கு பாத்தியப்பட்ட ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவராக இருக்கிறார் –அவரது இளைய மகன் தேஜஸ்வி யாதவ்.இதற்கு முன்பு –நிதீஷ்குமார்  ஆட்சியில் துணை முதல்வராக இருந்தவர். இப்போது சட்டசபை எதிர்க்கட்சி தலைவர்.

அவரது அண்ணன் –தேஜ் பிரதாப்  யாதவ். தம்பி துணை முதல்வராக இருந்த போது- அமைச்சராக இருந்தார். தற்போது எம்.எல்.ஏ.

இருவருக்கும் ஏழாம் பொருத்தம். தங்களுக்கு வேண்டிய ஆட்களை உடன் சேர்த்துக்கொண்டு தனி ஆவர்த்தனம் நடத்தி வருகிறார்கள்.

இந்த மோதல் இப்போது பகிரங்கமாகி இருக்கிறது.

யாருடனும் கலந்து ஆலோசிக்காமல், அண்ணன் பிரதாப் ,கடந்த 1ஆம் தேதி முதல் மாநிலம் தழுவிய யாத்திரை நடத்தி வருகிறார். ’’மாற்றத்துக்கான  யாத்திரை’’என்று இதற்கு பெயர் சூட்டியுள்ளார்.( ஆட்சி மாற்றத்துக்கா அல்லது கட்சி தலைமையை மாற்றுவதற்கா என்று தெரியவில்லை.)

இந்த நிலையில் தேஜஸ்வியும் ,தன் பங்குக்கு ஒரு யாத்திரையை ஆரம்பித்துள்ளார். கடந்த வியாழக்கிழமை தர்பங்கா என்ற இடத்தில் இந்த  யாத்திரையை தொடங்கினார்.இதுவும் மாநிலம் தழுவிய  பயணம் தான்.

‘’தேர்தல் நெருங்கும் நேரத்தில் வெற்றிக்கான வேலையை பார்க்காமல்  அண்ணனும்.தம்பியும் ஆளுக்கொரு திசையில் சென்று கொண்டிருக்கிறார்களே’’ என கட்சி தொண்டர்கள் புலம்புகிறார்கள்.

ஆளும் கூட்டணியில் உள்ள பா.ஜ.க.வும்,ஐக்கிய ஜனதா தளமும்’’லாலு குடும்பத்தில் மகாபாரதம் கதை நடக்கிறது ‘’என்று கை தட்டி சிரிக்கிறார்கள்.

—பாப்பாங்குளம் பாரதி