’கனிமொழி அமைச்சர் ஆவார்’’… தி.மு.க.எம்.எல்.ஏ. கருத்தால் ஸ்டாலின் கோபம்

Must read

’கனிமொழி அமைச்சர் ஆவார்’’… தி.மு.க.எம்.எல்.ஏ.கருத்தால் ஸ்டாலின் கோபம்

ஜெயலலிதா இறந்த பின் ,அ.தி.மு.க.அமைச்சர்கள் ‘வாய் பூட்டு” உடைத்து மனம் போல் பேசி வருவதை இரண்டு ஆண்டுகளாக பார்த்து வருகிறோம்.

கருணாநிதி மறைந்த பிறகு தி.மு.க.மூத்த தலைவர்களும், கட்சி மேலிடம் தெரிவிக்க வேண்டிய  கருத்தை –தாங்களே  தெரிவித்து ஸ்டாலினை சங்கடத்துக்கு ஆளாக்க ஆரம்பித்து விட்டார்கள்.

கொஞ்ச நாட்களுக்கு முன்பு –‘’ம.தி.மு.க.வும்,விடுதலை சிறுத்தைகளும் தி.மு.க. கூட்டணியில் இல்லை’’என்று கூறி –சர்ச்சையில்  சிக்கினார் துரைமுருகன்.

துரைமுருகன் கருத்தால் தூக்கத்தை தொலைத்த வைகோவும்,திருமாவளவனும் இப்போதுதான் சகஜ நிலைக்கு வந்துள்ளனர்.

இந்த நிலையில்,’’வரும் நாடாளுமன்ற தேர்தலில் கனிமொழி தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடுவார்’’ என்று கருத்து தெரிவித்து ஸ்டாலினுக்கு தர்ம சங்கடத்தை எற்படுத்தியுள்ளார்- தூத்துக்குடி தி.மு.க.பெண் எம்.எல்.ஏ.கீதா ஜீவன்.இவர் மாவட்ட செயலாளராகவும் இருக்கிறார்.ஒருங்கிணைந்த தூத்துக்குடி மாவட்ட செயலாளரும் ,கருணாநிதியின் முரட்டு பக்தருமான  பெரியசாமியின் மகள். அமைச்சராகவும் இருந்தவர்.

இரு  தினங்களுங்கு முன்பு கோவில்பட்டி அருகே நடந்த கிராம சபை கூட்டத்தில் பேசும் போது இந்த கருத்தை தெரிவித்துள்ளார்- கீதா.

அத்தோடு விட்டாரா? இல்லை.

‘’மத்தியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமையும் போது ,அமைச்சரவையிலும் கனிமொழி அங்கம் வகிப்பார்’’என்று கூறி –தி.மு.க.வையும்,கூட்டணி கட்சிகளையும் அலற  வைத்துள்ளார்.

அவரது கருத்தால் பெரும் சங்கடத்துக்கு ஆளாகி இருக்கிறார் –ஸ்டாலின்.

தி.மு.க.கூட்டணியில் சேரும் கட்சிகள் ஓரளவு உறுதியாகி இருந்தாலும்-இன்னும் முழு வடிவம் பெறவில்லை.

அ.தி.மு.கவின் இரு அணிகளும் பலமாக இருக்கும் தென் மாவட்டங்களில் அதிக தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கும் முடிவில் ஸ்டாலின்  உள்ளார்.

இந்த நிலையில் கீதாஜீவனின் பேச்சு –சர்ச்சையை  ஏற்படுத்தி விட்டது.

கீதா ஜீவன் ,அவராகவே பேசினாரா?அல்லது கனிமொழி சொல்லி பேசினாரா? என்ற விவாதம் தி.மு.க .மூத்த தலைவர்களிடம் ஓடிக்கொண்டிருக்கிறது.

தூத்துக்குடியில் பெரும்பான்மையாக உள்ள நாடார்  சமூக வாக்குகளை குறிவைத்து-அங்கு போட்டியிட கனிமொழி –காய் நகர்த்தி வருவது வெளிப்படையாக தெரிந்தது என்றாலும்- சில தினங்களில் தோழமை கட்சிகளுடன் தி.மு.க. இடபங்கீடு தொடர்பாக பேச உள்ள நிலையில் –கீதா ஜீவன் இப்படி பேசி இருக்க வேண்டாம் என்பது தி.மு.க.நிர்வாகிகளின்  ஆதங்கமாக உள்ளது.

–பாப்பாங்குளம் பாரதி

More articles

Latest article